பொங்கல் – அன்னை மெஸ்

கடைசியா, இந்த வருஷம் தமிழ்ல எழுதணும்னு முடிவு பண்ணி, தை 1க்குத் துவங்கியாச்சு. சீக்கிரம் முடிச்சிருவேன்னு நினைக்குறேன். எழுதிக் கொண்டிருக்கும் அன்னை மெஸ் நூலிலிருந்து ஒரு பகுதி.


புது வருசம் மொக்க வாங்கினதுக்கு அப்புறம் பெருசா யாரும் எதுவும் கண்டுக்கலை. ஆனா அந்த தடவை பொங்கலுக்கு பயங்கர பில்ட்-அப். ஒரு எப்.எம் சேனல் வெச்சு என்னெல்லாம் பண்ண முடியும்னு நாங்க முத தடவை பாத்தது அப்பத்தான். எங்க கடைக்கு எதுத்தாப்புல பேன்சி ஸ்டோர் வெச்சிருந்தவர் மணிமங்கை. அவருக்கு வியாபாரம் பண்றதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான். அவர் கண்ணும் கருத்துமா இருந்தது எப்.எம் ரேடியோக்கு கார்ட் போட்றது. எங்க கடைல ரேடியோ டேப் ரெண்டும் இருக்குனு சத்தமா வைக்க சொல்லி ஒரு நாளைக்கு ஒரு தடவை அவர் பேர் வாசிக்கும் போது அவர் முகத்தைப் பாக்கணுமே. எங்க தெருவுக்கே லைட் போட வேண்டாம். அப்படி ஒரு பிரகாசமாயிடும்.

எங்க அன்னை மெஸ்க்கு நேரடிப் போட்டி எதுத்தாப்புல இருந்த சாந்தி மெஸ் தான். அந்தக் கடைக்காரன் மணிகண்டன், கமல் ரசிகர் மன்றத்துல முக்கியமான ஆள். பாத்தா சிரிச்சுப்பமே தவிர பெருசா பேசிக்குறதில்லை. எங்க கடைக்கு வர்ற ஆட்களை திசைத் திருப்பி அவங்க கடைக்கு அவன் கூட்டிட்டுப் போறதா அப்பாக்கு ரொம்ப நாளா சந்தேகம். அப்படிப்பட்ட மணிகண்டன் எங்க கடைக்கு வரலாமா வேண்டாமானு நின்னுகிட்டு இருந்தான். நாமளா ஏன் போய் பேசணும்னு எனக்கும் ஒரு சங்கோஜம்.

”ஏலே! அவன் என்னை அவன் கடைக்கு இழுக்கத்தான் இங்க வந்து நிக்கான். உங்கப்பா என் சம்பளத்த ஏத்தலைனா நானும் போய்கிட்டே இருப்பேன்” எங்க சமையல் மாஸ்டர் வேற என் வயித்துல புளி கரைச்சார். அவன் கூப்பிடாட்டிக் கூட இந்தாளா போயிருவார் மாதிரி இருந்துச்சு. சரி என்னனு கேட்டுரலாம்னு போனேன். சரியா மணிமங்கை கடைக்குள்ள வந்தாப்புடி.

“நம்ம மணி இருக்காம்லா.. அவனுக்கு ஒரு உதவி வேணுமாம்”

”என்ன உதவி?”

“இரி அவனே சொல்லுவான்.”

மணிய அவ்வளவு பணிவா நான் பாத்ததே இல்லை. “அதொண்ணுமில்லை. பயலுவோ போயிட்டு விருமாண்டி பட பாட்டு கேசட்டு வாங்கிட்டு வந்துருக்கானுங்க. என்கிட்ட டேப் இல்லை. உங்க கடைல போட்டு ஒரு அரை மணி நேரம் கேட்டுக்கிடலாமா?”

“அதுக்கென்ன”

கவரை சரட்டுனு கிழிச்சு கேசட்டை வெளில எடுத்தாப்புல. கேசட்ட என் கைல குடுக்கும் போதே கட்டை குரல்ல “விரு விருமாண்டி விருமாண்டி”னு சவுண்ட் வேற. அதுக்குள்ள மணியோட கூட்டாளி எல்லாம் நம்ம கடைல கூடிட்டாங்க. காலைல டிபன் முடிஞ்சு மதியம் சோறு பொங்கிட்டு இருந்ததால வியாபாரம் எதுவும் பாதிக்கலை. கேசட்டை டேப்புல போட்டு ஆன் பண்ணுறதுக்கு முன்ன மணிகிட்ட கேட்டேன் “எனக்கென்ன கிடைக்கும்?”

ஒரு நிமிசம் யோசிச்சாப்புல. “நீங்க அடிக்கடி பாளையங்கோட்டை போவியளோ?”

“ஆமா அதுக்கென்னா?”

“ஒரு தடவை உங்களை ருசி ஹோட்டல்ல பாத்தா மாதிரி இருந்துச்சு.”

“சரி”

“இங்க உங்க கடைல நீங்க முட்டை வைக்குறதில்லை. டெய்லி நைட் எங்கடைல ஆம்லெட் இல்லை ஆப்பாயில் சாப்பிட்டுகிடுங்க”

எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்தது.

முத பாட்டே விரு விருமாண்டினு ஆரம்பிக்கும்னு நினைச்சுட்டு டான்ஸ் போட வேட்டி எல்லாம் மடிச்சு கட்டிகிட்டு தயாராகிட்டாங்க. கேசட் போட்டு ஒரு பத்து செகண்ட்க்கு சவுண்டே இல்லை.. எல்லோரும் எங்க ஸ்டீரியோ செட்டையே வெறிச்சுப் பாத்துகிட்டு இருந்தாங்க. கமல் குரல் கேக்குமுன்னு பாத்தா ஒரு பொம்பளை குரல் “உன்னை விடடடட”னு இழுத்துச்சு. ஏத்திக்கட்டின எல்லா வேட்டியும் கீழ இறங்கிருச்சு.

“என்னலே”னு எல்லோரும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பாத்துகிட்டோம். பாட்டெல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனா நாங்க அதை எதிர்பார்க்கலை.
“பாட்டு ஓடட்டுமா?” நான் கேட்டேன்.

“கொஞ்சம் ஓட்டி விட்டு அடி விழுற பாட்டு போடுங்களேன்.”

சரினு கேசட்டை ஓட்ட ஆரம்பிச்சேன். நிறுத்தி நிறுத்தி அடுத்த பாட்டுக்கு வந்தா அதுல கமல் பாடினார்னு கேசட்ல போட்டிருந்தது. கீழ விழுந்த வேட்டி எல்லாம் மறுபடி மேல ஏறிச்சு. ஆனா அது ஒரு ஒப்பாரி “மாட விளக்கை யாரு இப்ப தெருவோரம் ஏத்துனா..” நான் திரும்பி பாக்குறதுக்குள்ள மணியோட கூட்டாளிங்க பாதியா கொறைஞ்சிட்டாங்க. என்ன பண்ணனு தெரியாம மணிய பாத்தேன். அவனுக்கும் ஒண்ணும் புரியலை. அதுக்குள்ள மணிமங்கை, “மணி பதிணொண்றை ஆச்சு”னு இழுத்தாப்புல.

“அதுக்கு?” மணி கடுப்புல கேட்டான்.

”ரேடியோல என் பேரைச் சொல்லுவாங்க”

“இருவே கொஞ்சம். வேணும்னா நான் ஒரு மைக் செட் வெச்சு, தெரு பூரா ஸ்பீக்கர் கட்டி உம்ம பேரைக் கத்துதேன். இன்னிக்கு கொஞ்சம் சும்மா இரியும்”

“அதில்லை”

“சரி தலைவரே, நீங்க ரேடியோ போடுங்க. எனக்கும் கடைல வேலை இருக்கு. மதியம் சாப்பாடு முடிச்சுட்டு பரோட்டாக்கு மாவை ஊறப்போட்டு அப்புறம் வரேன். இல்லைனா இந்தாளு அழ ஆரம்பிச்சுருவான்” மணி கிளம்பிட்டான். நானும் ரேடியோ போட்டேன். மணிமங்கைப் பேரும் வந்துச்சு.

சாப்பாட்டுக்கு முதல் ஆள் வர்றதுதான் கஷ்டம். அப்படி வந்துட்டாங்கனா, சட சடனு கூட்டம் வரத் துவங்கிரும். அன்னிக்கு அப்படித்தான் நாங்க முத ஆளுக்காக காத்துகிட்டுக் கெடந்தோம். சமையல் மாஸ்டருக்கும் என்ன பண்ணனு தெரியாம வெளில பெஞ்சுல உக்காந்த்துகிட்டு இருந்தார். எப்.எம்ல ஊர் சுத்தலாம் வாங்கனு ஒரு நிகழ்ச்சி ஓடிகிட்டு இருந்தது.

“பத்துக்கு பத்தடில ஒரு ஊரு; அதைச் சுத்தப் போறாங்களாம். நாங்கெல்லாம் துபாய்ல…”

“அங்கெயும் புரட்டா தானவே சுட்டீரு, அதுல என்ன பெருமை?” வெட்டு மாஸ்டருக்கு துபாய்னு பேரைக் கேட்டாலே எரியும்.

“எப்.எம் அமத்துடே. கடுப்பா இருக்கு” சமையல் மாஸ்டர் துண்டை உதறிப் போட்டார். எனக்கு உதற ஆரம்பிச்சுட்டு. இந்தாள் துண்டை உதறினா பத்தி நிமிசத்துல உறங்கிருவானே.

என்ன கேசட்டு கெடக்குன்னே தெரியாம டேப்பைப் போட்டேன். போடவும் மொத ஆள் சாப்பிட வந்தாச்சு. அவாளுக்கு இலைப் போட்டு, உப்பு ஊறுகாய் வெச்சு, சாப்பாடு வைக்கதுக்குள்ள அடுத்தபாட்டு ஓட ஆரம்பிச்சுட்டு. “பாண்டி, மலையாளம், காசி, ராமேஸ்வரம்”னு கட்டைக் குரல்ல சத்தம் வர எனக்கு உடனே பாட்டு பிடிச்சுப் போச்சு. அதுதான் விருமாண்டிப் பாட்டு. சரினு லைட்டா சத்தம் அதிகம் வெச்சேன். அது தெருமுக்கு வரை அலறிட்டு. பக்கத்துல வெள்ளை அடிச்சுட்டு இருந்தவன், மீன் வித்துட்டு இருந்தவன், கொத்து வேலை பாத்துகிட்டு இருந்தவன் எல்லோரும் கடைக்கு வந்துட்டாங்க. சும்மா பாட்டுக் கேக்க கூச்சமா இருந்துச்சோ என்னவோ இலை போட சொல்லிட்டாங்க. தூங்கப் போன எங்க சமையல் மாஸ்டர் கூட வந்து பரிமாற ஆரம்பிச்சுட்டாரு. சத்தம் சாந்தி மெஸ் வரைக்கும் கேட்டிருக்கும் போல, மணிகண்டனும் வந்துட்டான். மணிமங்கை முகத்தை விட அவன் முகம் தான் பிரகாசமா இருந்தது.

”தம்பி நைட் கடைய கட்டிட்டு வந்துருங்க. உங்களுக்கு இன்னிக்கு ஸ்பெஷல் கொத்து பரோட்டா”னு சொல்லிட்டு கெளம்பிட்டான். அந்தக் கேசட் தேயுற வரைக்கும் எங்க கடைல விருமாண்டிப் படப் பாட்டுத்தான் ஓடிச்சு. எனக்கு நெதமும் முட்டையும் கிடைச்சது.

பொங்கல் வந்தாலே ஊர் வேற மாதிரி ஆகிடும். அந்த தடவை ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு, காரணம் மணிகண்டன். ஒரு நாள் வந்து சட்டை அளவு வாங்கிட்டுப் போனான். அடுத்த நாள் பஜார்ல இருக்குற எல்லாருக்கு ஒரே மாதிரி கருப்புச் சட்டை வாங்கியாச்சு. பொங்கல் அன்னிக்கு மொத ஷோ ராம் தியேட்டர்ல படம் பாக்குறதுன்னும் முடிவாகிருச்சு. எங்கப்பாவும் ஒண்ணும் சொல்லலை.

பாட்டுக் கேசட்டுல என்ன பிரச்சினையோ படத்துலயும் அதேதான் பிரச்சனை. பள்ளிக்கூட யூனிபார்ம் மாதிரி ஒரே கலர் சட்டைப் போட்டுப் போனா, அங்க கமல் மொட்டை அடிச்சுட்டு உக்காந்திருந்தார். பொங்கல் அன்னிக்கு கரும்பைச் சவைச்சுட்டு சந்தோசமா படம் பாக்கலாம்னா அவரு ஜீவகாருண்யம் பத்திப் பேசிட்டிருந்தார்.

படம் முடிஞ்சு வீட்டுக்கு போகலை. மணிகண்டன் கடைல அவன் வெச்சிருந்த ஒரு குவாட்டர் பிராண்டிய குடிச்சுட்டு எங்க கடை பெஞ்சுல வந்து உக்காந்தான்.

“படம் பிடிக்கலியோ?”

“படம் எங்க பாக்கவிட்டானுவ? நம்ம சேட்டு வேற என் மேல வாந்தி எடுத்து வெச்சுட்டான். இன்னொரதர போகணும்”

“நானும்தான். அவரு எதுனா யோசனையோடத்தான் எடுத்திருப்பாரு. நமக்கு வெளங்கத் தான் சித்த நாள் ஆவும்.”

எனக்கு என்ன சொல்லனு தெரியலை. தை மாசக் குளிர் லேசா உறைக்க ஆரம்பிச்சது.

“பாட்டு போடுங்களேன்”

பி சைட் முழுசா முடிஞ்சு போயிருந்தது. கேசட்டைத் திருப்பிப் போட்டு கொஞ்சம் ஓட விட்டேன்.

“இல்லை இல்லை. மொத பாட்டே போடுங்க”

உன்ன விடடடடனு அந்தம்மா ஆரம்பிச்சது. பொங்கலன்னைக்கு சாயந்தரம், தெருவுல கூட்டமே இல்லை. மணிகண்டனுக்கு குடிச்ச சரக்கு மூளையத் தொட ஆரம்பிச்சுட்டு. கண்ணை மூடித் தலைய ஆட்டிகிட்டு இருந்தான். குளிருக்குக் கை கட்டாம, தூரத்துல எறிஞ்ச தெரு வெளக்க வெறிச்சிட்டு உக்காந்திருந்தேன்.

அந்தப் பாட்டு நல்லாத்தானிருந்தது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.