கனவுப் பட்டறை

01

நான் தமிழ் புத்தகங்கள் வாசித்து பல நாட்களாகி விட்டன. ஆங்கிலத்தில் புதினம் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்த பிறகு அதற்குண்டான பயிற்சியாக பல ஆங்கில நாவல்களை வாசித்ததன் பலன், தமிழை விட்டு தள்ளிச் சென்று கொண்டே இருந்திருக்கிறேன். இதை நான் உணராமலில்லை. இருந்தும் என்னை மீண்டும் தமிழ் உலகிற்குள் இழுக்கும் விசை என்னைத் சென்ற சனி வரைத் தொடவில்லை. சனிக்கிழமை அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர் மதியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று வந்த பின்பு அந்த நிலை மாறியது. சென்னைப் பதிவர் குழுமம் சார்பாக நான் உட்பட நான்கு பேர் அங்கு சென்றிருந்தோம். எங்கள் குழுவில் இரண்டு பேர் சேர்ந்து சென்றாலே நாடு தாங்காது. நான்கு பேர் என்பதால் சிரிப்புக்கும் கிண்டலுக்கும் பஞ்சமே இல்லை. ஒரு இலக்கிய கூட்டத்தில் எங்களைப் போன்றவர்களுக்கு பொதுவாக இடமிருப்பதில்லை. நிகழ்ச்சி முடிகையில் மதியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் எப்பொழுதும் போல புன்னகையுடனும், அன்புடனும், கூச்சத்துடனும் எங்களுக்கு பிரதியில் ஒப்பமிட்டுக் கொடுத்தார். அன்று வீட்டிற்கு வர நேரமாகிவிட்டதால், ஞாயிறு அன்று புத்தகதைப் பிரித்தேன். பொதுவாக ஆழிசூழ் உலகு, கொற்றவை போன்ற நாவல்கள் தவிர மிச்சமுள்ள நாவல்களை ஒரே நாளில் படித்து முடிக்கும் பழக்கமுண்டு. கனவுப்பட்டறை அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் வெகு சில விஷயங்களே என்னை இரண்டு நாட்க்களுக்கு மேல் பாதித்திருக்கும்.

சரி இந்தப் புத்தகம் ஒரு உள்ள எழுச்சியை ஏற்படுத்திவிட்டது. இப்பொழுது ஒரு புலன் தூண்டப்பட்டதால் இது அற்புதம் அல்லது அனர்த்தம் என விமர்சிக்கக் கூடாது. இரண்டு நாட்கள் போகட்டும் என நான் எனக்கு சொல்லிக்கொண்டேன். ஆனால் இதைப் பற்றி எழுதாமல் இருக்க கூடாது என நடுராத்திரி இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த இணையதளத்தில் இதைத் தவிர மற்ற பதிவுகள் எல்லாமே ஆங்கிலத்தில். ஆனால் இதைத் தமிழில் எழுத வேண்டும் என ஒரு உந்துதல். இது மதிக்கு ஒரு வெற்றிதான். இரண்டாவது என்னதான் இருந்தாலும் ஆங்கிலம் எனக்கு அன்னிய மொழி. இந்தப் புத்தகம் எனக்கு ஏற்படுத்திய பாதிப்பை என்னால் ஒரு அன்னிய மொழியில் சொல்லிவிட முடியாது. என்னால் அம்மாவை மம்மி என அழைக்க முடியாது.

மொத்தம் பன்னிரெண்டு கதைகள். ஒவ்வொரு கதையயும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் மதி போல நான் ஒரு நல்ல கதை சொல்லி கிடையாது. கதை வடசென்னையைச் சேர்ந்த ஒரு பன்னிரண்டு பதின்பருவ சிறுவர்களைப் பற்றியது. அதாவது அவர்கள் உலகிற்குள் நாம் நுழைய ஒரு சின்ன திறவுகோல். நலந்தாவே என்ற தன்னார்வ நிறுவனம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒரு 25 மாணவர்களை மூன்று நாட்கள் வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு நடத்தப்படும் பட்டறையே இந்தக் கனவு பட்டறை. அங்கிருக்கும் சிறுவர்களுடனான ஒரு கருத்துப் பரிமாற்றம், ஒரு புரிதல் போன்றவற்றின் தொகுப்பு தான் இந்தப் புத்தகம். அந்த சிறுவர்களுடன் சேர்ந்ததினால் ம்திக்கு இவ்வளவு அழகாக கதை சொல்ல வருகிறதா, அல்லது மதி கதை சொல்வதினால் அவரால் சிறுவர்களை நெருங்க முடிகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால அவர் எழுத்துக்கு எப்பொழுதும் நான் ஒரு பெரிய ரசிகன்.

கதைகளைப் பற்றி சொல்லவேண்டுமானால் களவு மறத்தல் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சில வாக்கியங்கள் புத்தகத்தில் இருந்து இறங்கி வந்து என்னுடன் உரையாடின. “களவை விட்டுவிட முடிவு செய்த தருணம் என் மேல் எனக்கிருந்த மரியாதையை பல மடங்கு உயர்த்தியது. ஏமாற்றும் போது கிடைத்த சாகச உணர்வை விட இந்த உண்மை உணர்வு மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது” போன்ற வாக்கியங்கள் மனதில் நின்று விட்டன. கொக்கி குமார் கதை கிட்டத்தட்ட என்னை அழவே வைத்து விட்டது. என்ன நுணுக்கமான ஒரு மாணவனின் மனம். அதை நெகிழ்த்தும் ஒரு சிறிய உரையாடல் மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மை. இந்த இடத்தில் ஒரு உண்மையை நான் சொல்லியாக வேண்டும். என் நெருங்கிய நண்பர்களுக்கு இது தெரியும். எனக்கு குழந்தைகளைப் பிடிக்காது. அவர்கள் இருக்கும் பக்கம் நான் செல்லவே மாட்டேன். அவர்கள் விளையாட்டு எனக்கு புரிந்ததில்லை. நான் எப்பொழுதும் அவர்களுக்கு போர் தான். அந்த விஷயத்தில் என் அண்ணன் மீது எனக்கு கொஞ்சம் பொறாமைதான். எதையாவது செய்து அவர்களை பேச வைத்து விடுவார். கொக்கி குமார் கதை படித்து மூடி வைத்தவுடன், பல விஷயங்கள் என்னைப் பற்றி நானே யோசிக்கலானேன். அகந்தை என சொல்வதா, இல்லை இறங்கிப் போக முடியாத என் மனமா? எது பதின் பருவத்தினரிடம் நான் பழகுவதை அது தடுக்கிறது என ரொம்ப நேரம் யோசித்தேன். (முடிவும் கிடைத்தது; அது கடைசியில்). என்னைப் பார்த்து ஒரு சிறுவன் பேக் வாத்தியார் என சொன்னால் அடுத்த பேருந்தில் நான் சென்னை வந்திருப்பேன். போங்கடா, நீங்களும் உங்க சமூக சேவையும்னு

அடுத்த விஷயம் பாட்டும் கூத்தும் என்ற கதை. பல பெரிய பெரிய நிறுவனங்களில் இருக்கும் பெரிய பெரிய பிரச்சினைகளை இந்தக் கதையில் வரும் ஒரு உத்தியை வைத்து சரி பண்ணிவிடலாம். அந்த உத்தியை பயன்படுத்தும் பொழுது ஒரு மேலாளர் அல்லது ஒரு உயரதிகாரி என்ன மாதிரி பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும் என்பது முதற்கொண்டு மதி உங்களிடம் சொல்லி விடுகிறார். மற்ற சிறுகதைகளைப் போலல்லாது இங்கு முடிவு என்ன என உங்களுக்கு முதலிலேயே தெரிந்து விடும். இருந்தும் கதை முடியும் போது ஏற்படும் புல்லரிப்பும், ஒரு துளி கண்ணீருடன் வரும் பெரிய புன்னகையும் நம் மனம் வெற்றியையும், ஒரு சமூகத்தையும் எவ்வளவு விரும்புகிறது என்பதைக் காட்டிவிடும்.

இது ஒரு சிறுகதை தொகுப்பு மட்டுமில்லை. அதையும் தாண்டி பல விஷயங்கள். அதை மனதில் வைத்து மதி எழுதினாரா, இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாத வாதம். முக்கியமாக இந்தத் தொகுப்பை வாசித்த பொழுது என் குழந்தைப்பருவம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை உணர்ந்தேன். அப்பாவின், அம்மாவின் பொறுமை. ஆசிரியர்களின் கண்டிப்பு எல்லாம் இப்பொழுது ஒரு புதிய வெளிச்சத்தில் தெரிகிறது. ஆகவே மக்களே! உங்களின் சுய முன்னேற்றத்திற்காக, அழகு தமிழிற்காக மற்றும் இதுவரை நீங்கள் கண்டிராத பரிமாணங்களில் 12 பதின்பருவ கதைகளை அறிய கனவுப் பட்டறை புத்தகத்தை தைரியமாக வாங்குங்கள்.
எனக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.

மதி! இந்தக் கதைகளை எங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி எழுதியமைக்கு மிக்க நன்றி. இதைத் தவிர என்ன சொல்லனு தெரியலை.

புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் இங்கே வாங்கலாம்.. (கண்டிப்பா வாங்குங்க. மதிக்கு நான் கேரண்டி)

பி.கு. அந்த வயதினரிடம் நான் பழக விரும்பாமைக்கு ஒரு காரணம் நான் இன்னும் தயாரில்லை என்பது தான். என்னைப் போல அவர்களும் ஆகிவிடுவார்களோ என்கிற பயம் எப்போதும் எனக்கு உண்டு.

Comments

  1. மதி

    மிக்க நன்றி ப்ரகதீஷ்.. புத்தகம் உங்களை இணக்கமாகத் தொட்டிருப்பது குறித்து மிக மகிழ்ச்சி.. ஒரு வாசகனாக மற்ற வாசகர்களுக்கு மிக நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். மேலும் இதன் முன்னுரை எச்சரித்தது போலவே இனி நீங்கள் சிறுவர்களோடு நண்பராவீர்கள் என்று நம்புகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.