ஆய்தம் மிக முக்கியமான ஒரு தமிழ் எழுத்து. பிற மொழிகளில் இதை இல்லை என சொல்ல முடியாது. ஆனால் இதன் மாறுபட்ட உபயோகங்கள் தமிழ் எவ்வளவு முழுமையான ஒரு மொழி என்பதை அழுத்திச் சொல்லும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில், ”ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” அப்படின்னு சொல்லிருக்கு. அதாவது இந்த எழுத்துக்கு பின்னாடி வர்ற வல்லினத்தை மேற்கண்ட ஒலியமைப்புகளில் நுணுக்க ஆய்தம் பயன்பட்டிருக்கணும்.
இதை கேடயத்தில் இருக்கும் மூணு புள்ளிகளுக்கு நேராய் சொல்லுவாங்க. சில தமிழ் பாடப் புத்தகங்கள்லயும் அப்படித்தான் இருக்கு. ஆனா இந்த எழுத்து சங்க காலத்துல இருந்து இருக்கு. சங்க காலத்துல ஆயுதம் என்னும் வார்த்தை வரவே இல்லை. ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் போன்ற வார்த்தைகள்தான் இருக்கே தவிர ஆயுதம்னு எங்கேயும் இல்லை. வேணும்னா இந்த எழுத்து மேல ஆசை இருக்குற யாரோ கேடயம் செஞ்சிருக்கலாம். அதே மாதிரிதான் தாலியும்.
இன்னைக்கு தமிழ் கலாசாரம், பண்பாடு அப்படி இப்படினு கத்துறவங்க கொஞ்சம் அகநானூறு படிச்சா நலம். அகநானூறுனா என்னன்னா “உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்” மேல எங்கேயுமே தாலி, மங்கல நாண்னு எதுவுமே இல்லை. ஆனால் ஊழினால் ஒன்று கூடிருக்காங்க.. ஆனா இந்த தமிழ் வழி வந்த மக்கள் நாம, ரொம்பத்தான் சீன் போடுறோம்.
சில நேரங்கள்ல, ஒரு காலத்துல நம்ம கலாசாரத்துல எவ்வளவு முன்னேறியிருந்தோம்னு நினைக்கு பெருமையா இருக்கு. அதே நேரம் இதெல்லாம் சரியாத் தெரியாம இப்படி பேசுறாங்களேனு கவலையாவும் இருக்கு. தமிழுக்கு ரென் அண்டு மார்ட்டின் போல ஒரு எளிய இலக்கண முறை வேணும்னு சொல்லுறாங்க. அவசியமில்லைங்குறது என் கருத்து. நம்ம குழந்தைகளுக்கு இதை நம்மளே சொல்லித் தரலாம்.
தமிழ் மொழிக்கு எதுக்கு செம்மொழி அந்தஸ்து குடுத்தாங்கனே பாதி பேருக்குத் தெரியலை. 2000 வருஷத்துக்கு முன்னால் எழுதின சங்கப் பாடல்ல “ஏற்றுக உலையை; ஆக்குக சோறை”னு இருக்கு. இப்பவும் அதே வார்த்தையைத் தான் நாம பயன்படுத்துறோம். மெல்லத் தமிழ் இனி சாகும்னு எல்லோரும் சொல்லி பயப்படுறாங்க. எனக்கு அந்தக் கவலை இல்லை சார். அழிக்க வல்ல எல்லாத்தையும் விட தமிழ் மிகப் பெரியது.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.