அது நம்ம நாட்டுக்கு மட்டும் உண்டா, இல்லை உலகம் பூராவே அப்படியானு தெரியலை. எங்கியாச்சும் நம்ம ஊர் பசங்களைப் பாத்தா வரும் பாருங்க ஒரு பாசம். அது மாதிரி ஒரு உணர்வு தாய்ப்பாசத்துக்குத் தவிர வேற எதுக்கும் இருக்கானு தெரியலை.
பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். இந்த விதிக்கு ஆளாகதவங்க மட்டும் தான் வாழ்க்கைல புண்ணியம் பண்ணவங்கனு நான் அடிச்சு சொல்லுவேன். பொறந்து, படிச்சு, விளையாடி, தெருப்பொறுக்கி, வெளியூர்ல இருந்து வர்ற சொந்தக்காரங்களுக்கு சுத்திக்காமிச்சு, திடீர்னாப்புல படிப்பு முடிச்சு வேற ஒரு ஊருக்கு போறதுங்குறது, ஒரு செடிய வேறோட பிடுங்கி வேற இடத்துல நடுற மாதிரி. அந்த வலி செடிக்குத்தான் தெரியும். செடி மாதிரியான நம்மள மாதிரி ஆளுங்களுக்குத்தான் தெரியும்.
பொதுவா திருநெல்வேலில இருந்து குற்றாலத்துக்கு நாற்பது நிமிஷத்துல போயிடலாம். ஒவ்வொரு சீசனுக்கும் அங்க போயிருவோம். பார்டர் புரோட்டா கடைல சாப்பிட்றதப் பத்தி தனிப்பதிவு தான் எழுதணும். அதனால அதை இங்கச் சொல்லலை. குற்றாலத்துல குளிக்கும் போது சென்னைல இருந்து வர்றவங்க எல்லாம் ஓனு கத்திகிட்டே அருவிக்கு ஓடி வருவானுங்க. அவ்வளவு சீக்கிரம் குளிச்சிட்டு வெளில வரவும் மாட்டாங்க. கடுப்பா இருக்கும். என்ன பண்ணுறது, விருந்தோம்பலுக்கு பேர் போன மக்களாச்சே நாங்க. அவங்க வெளில வர்ற வரைக்கும் காத்துகிட்டு இருப்போம். இல்லை ஐந்தருவிக்குப் போவோம். அங்க ஒரு பஸ். அங்க ஓனு கத்திகிட்டே ஓடி வர இரு கூட்டம்.
சென்னை வந்தப்புறம்தான் தெரிஞ்சது அவங்க ஏன் அப்படி பண்ணுறாங்கனு. அப்படி இப்படினு எட்டு வருஷம் ஆச்சு. சென்னைல இருந்து போன வருஷம் தான் திருநெல்வேலி போனேன். எல்லாமே மாறிடுச்சு. வண்ணரப்பேட்டைல ஆரெம்கேவி, அங்கிட்டு ஒரு பாலம். வித்தியாசமா இருந்துச்சு. எல்லாத்தையும் புதுசா பாத்துட்டே போனேன். எதோ மனசு கனமா இருந்துச்சு. நைட் ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி போடுற கடைல ஒரு இட்லிக்கு 4 சட்னி சாம்பார் பொடியோட ஒரு வாய் எடுத்து உள்ள போடும்போதுதான் தெரிஞ்சது, எங்க ஊரையும், இந்த சாப்பாட்டையும் எவ்வளவு தேடுதுன்னு. நல்லா தின்னுட்டு நடக்க முடியாம நடந்து வந்து ரூம்ல படுத்தாச்சு. அடுத்த நாளைக்கு நண்பன் அருவிக்குப் போறதுக்கு கார் எடுத்திருந்தாப்ல. அவன் காலைல பக்காத் திருநெல்வேலிக்காரன் மாதிரி ஒரு டவுசர், ஒரு துண்டு மட்டும் எடுத்துட்டு வந்தான். நம்மதான் தீம்பார்க் போற மாதிரி பை எல்லாம் எடுத்துட்டுப் போனோம். மேலகரம் தாண்டும்போதே சாரல் அடிக்க ஆரம்பிச்சுட்டு. கண்ணாடிய இறக்கி விட்டு கைய வெளில நீட்டிகிட்டேத் தான் போனேன். திருநெல்வேலி காலேஜ் பசங்க எல்லாம் பைக்ல வந்திருந்தாங்க. பழைய குற்றாலத்துல பார்க்கிங்ல வண்டிய போடும்போதுல இருந்து எவ்வளவோ அடக்கி வெச்சுப் பாத்தேன். சாதாரணமா நடந்து மசாஜ் இடத்தைத் தாண்டும் போது தாங்கவே முடியலை. ஓனு கத்திகிட்டே அருவியப் பாக்க ஓடினேன். காலேஜ் பசங்க எல்லாம் வழி விட்டு நின்னாங்க. சிரிச்சுருப்பாங்க. ஒரு எட்டு வருஷம் கழிச்சு அவங்களுக்கும் புரியும்.
Comments
sema sema.. eppa dhan nan enga sontha ooruku poitu vandhen.. romba kastama irundhuthu.. but pozhapuku vera ellama irukku. kalam marinalum oor pasam maradhu
கண்டிப்பா அபர்ணா.. சில நேரம் தள்ளி இருக்குறதாலதான் இவ்வளவு நினைப்பு வருதோனு தோணும்.
Pingback: Chennai chronicles… | Prasanna's Ramblings