ஆஹா!!

திருநெல்வேலி பத்தி எழுதணுனாலே சந்தோஷமாயிருது. ”ஆ”ங்குற எழுத்துக்கு என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப, நம்மள ஆஹானு சொல்ல வெச்ச விஷயத்த எழுதலாம்னு சட்டுனு தோணிட்டு. நம்ம வாய்ல இருந்து ஆஹா வர்றது ரொம்ப கஷ்டம். அப்படி வர வைக்குற ஒரே விஷயம்…வேறென்னா, சோறுதான். 

எல்லா ஊர் மாதிரி எங்க ஊர்லயும் சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது. சின்ன சின்ன காம்பவுண்ட்ல வளந்த குழந்தைங்க எல்லாம் மதியம் யார் வீட்டுல சாப்பிடுறாங்கனு அவங்களுக்கும் தெரியாது, பெத்தவங்களுக்கும் தெரியாது. ஆனா எல்லாரும் நல்லா போஷாக்காத்தான் வளந்தோம். சனிக்கிழமை மதியம் மட்டும் எங்க பள்ளிக்கூடத்துல அரை நாள். மதியம் அடிச்சி பிடிச்சி வீட்டுக்கு ஓடியாருவோம். சுட சுட சாப்பாடு போட்டு, அதுல பருப்பும் நெய்யும் கலந்து, ஒரு துண்டு நார்த்தங்காய் வைச்சு எங்க பாட்டி எங்களுக்கு ஊட்டி விடுவாங்க பாருங்க. இப்ப எழுதும்போதே தட்டச்சுப் பலகைல எச்சி ஒழுகிடுச்சு. 

கொஞ்சம் வளந்த பிறகு வீட்டுல எங்க சாப்பிட்டோம்? எல்லாம் தெருவுல தான். எங்க ஊர்ல சில வீட்ல எல்லாம் ஓட்டல்ல சாப்பிட்டாலே திட்டுவாங்க. நீ என்ன நாடோடியா? அப்படியே திங்கணும்னாலும் பார்சல் கட்டி வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிடுனு பெரிய பாட்டா பாடுவாங்க. ஆனாலும் விடுவோமா? பாளையங்கோட்டை பெருமாள் கீழ ரத வீதில லலித விலாஸ்னு ஒரு மெஸ் உண்டு. அங்கதான் பொட்டுக் கடலை சட்னி போடுவாங்க. அதுக்காகவே அங்க போவோம். சாப்பிட்டு முடிச்சு, அப்படியே ரெண்டடி எடுத்து வெச்சா, தெற்கு பஜார்ல கணேஷ் லாலால ஒரு அம்பது கிராம் சூடா அல்வா சாப்பிட்டு முடிச்சுக்கலாம். 

இல்லையா, அப்படியே தெற்கு பஜார்ல நடந்து போய், லோகமதி ஓட்டல்ல புரோட்டாவோ, இல்லை வெங்காய தோசையோ சாப்பிடலாம். அவங்க வைக்குற கார சட்னிக்கு நான் அடிமை. இல்லைனா அப்படியே நடந்து போனா ராமசாமி கோயில் மைதானத்துல வித விதமா தட்டுக்கடை இருக்கும். பானி பூரி, சுண்டல், பருத்திப்பால், கைமா இட்லி, ருமாலி ரோட்டினு என்ன வேணும்னாலும் கிடைக்கும் (நான் சொல்றது 2000 – 2006 சமயத்துல. இப்ப ராமர் கோயில் மைதானத்துல எதுவுமே இல்லை). சாப்பிட்டு வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப் போற வழில ஒரு ஆட்டுக்கால் சூப் குடிச்சோம்னா வயிறு திம்முனு ஆகிடும். 

வெள்ளிக்கிழமை வடக்கு பஜார்ல சேது மெஸ்ல கூட்டம் சொல்லி மாளாது. அன்னிக்கு சொதி சாப்பாடு போடுவாங்க. அதை எப்படி பண்ணனும்னு இங்க எழுதிருக்கேன். சொன்னா நம்ப மாட்டீங்க..காலைல பத்து மணிக்கெல்லாம் கூட்டம் வர ஆரமிச்சுடும். எப்பவாச்சும், சிவன் கோயில் பக்கத்துல இருக்குற சௌராஷ்டிரா கடைக்குப் போவோம். இங்க இருக்குற 14 இட்லி சாம்பாருக்கெல்லாம் முன்னாடியே சாம்பார்ல இட்லி மிதக்குற அளவுக்கு குடுப்பாங்க. 

நான் கடைல வேலை பாத்துட்டு இருக்கும்போது எனக்கு வாரா வாரம் சனிக்கிழமை சம்பளம் போட்ருவாங்க. நண்பர்கள் பட்டாளம் சரியா 9 மணிக்கெல்லாம் எங்க கடைக்கு வந்திடுவாங்க. சம்பளம் வந்த உடனே சைக்கிள் அழுத்திட்டு தெற்கு பஜார் ஜெயந்தி புரோட்டா ஸ்டால் போயிருவோம். அங்கத்தான் ஒரு புரோட்டா ஒண்ணரை ரூவா. 20 ரொட்டிக்கு 30 ரூபா கணக்கு. ஏன்னா எங்க செட்ல யாரும் அதுக்கு குறையா திங்க மாட்டோம். 

இதோட அருமை எல்லாம் அப்போ தெரியலை. ஆனா பாருங்க சென்னைல சாப்பிடப் போகணும்னா, சென்னை புட் கைட், ஸொமாட்டோ எல்லாம் படிச்சுத் தெரிஞ்சுத்தான் போக வேண்டி இருக்கு. ஒரு காலத்துல நான் என்னமா சாப்பிட்டிருக்கேன்.. ஆஹா

Comments

 1. GS

  அருமையான நினைவூட்டல் ..
  – சொதிச் சோறும் இஞ்சித் துவையலும் தின்று வளர்ந்து மற்றொரு திருநெல்வேலிக்காரன்

  1. Bragadeesh Prasanna

   இந்தக் காம்பினேஷனை அடிச்சுக்க இன்னும் எந்த சமையலும் வரலை.. என்னைப் பொறுத்தவரை.

  1. Bragadeesh Prasanna

   என்னங்க இருபதுக்கே இப்படி சொல்லிட்டீங்க. நாங்க பசிக்குத்தான் அப்படி சாப்பிடுவோம், ருசிக்கு சாப்பிட்டா கணக்கே பாக்காம குத்துமதிப்பாத் தான் காசு குடுத்துட்டு வருவோம்.

  1. Bragadeesh Prasanna

   நீங்க உங்க பிளாக்ல இன்னிக்கு வடாபாவ் போட்டோ தான போட்ருகீங்க தீபா? எல்லாம் அமையுது. இன்னிக்கு வெளில சாப்பிட சொல்லி மேல இருந்து வந்த சிக்னல் இதுனு நான் நினைக்குறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.