ஷேன் கேரத் என்னும் ஒரு இயக்குனரைப் பற்றி என் நண்பர் ஒரு முறைச் சொன்னார். குறைந்த செலவில் தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டே ஒரு அருமையான டைம் டிராவல் படமெடுத்தவர் என்று.
பிரைமர் என்னும் அந்தப் படத்தை பார்த்து எனக்குத் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. அநியாயத்துக்கு அறிவியல் வார்த்தைகள், கலைச் சொற்கள் எனது பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியரையும் அவரது பிரம்பையும் நினைவூட்டியதால் மேற்கொண்டு பார்க்கவில்லை.
அவரது அடுத்த படமான அப்ஸ்ட்ரீம் கலர் என்னும் படம் வந்தவுடன் எங்கள் சினிமா வட்டத்தில் ஒரே குதூகலம். இந்த முறை தாவரவியல் மற்றும் விலங்கியல் என்று சொன்னார்கள். எனது பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல் ஆசிரியையும் பிரம்பைக் கையாண்டதால் பழைய நினைவுகள் வரக்கூடுமென இந்தப் படத்தைப் பார்ப்பதையும் தள்ளி வைத்தேன். ஆனால் படம் பார்த்த பொழுது இதைப் போல் ஒரு கதையை இதை விடத் தெளிவாக சொல்ல முடியாது எனப்பட்டது.
படத்தின் மூலம் சாதரணமானது. ஒரு திருடன், சில பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு போதை மருந்து கொடுத்து அவர்களின் சொத்துகளை அபகரித்துக் கொள்கிறான். பின்னர் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு திசை மாறுகிறது என்பதுதான் படம். இதைச் சொன்ன விதத்தில்தான் ஒரு இன்ப அதிர்ச்சி. சில படங்கள் பார்ப்பவர்களை பழுத்த முட்டாள்கள் என்பது போல் எடுக்கப்பட்டிருக்கும். சில படங்கள் சைன்ஸ் சிம்போசியம் போல் அதைப் பற்றித் தெரியாதவர்கள் பார்க்க முடியாதபடி இருக்கும். ஆனால் அப்ஸ்ட்ரீம் கலர் இது இரண்டுக்கும் நடுவில் தெரியாதவர்களை புரிய வைத்து, புரிந்தவர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் திரைக்கதை கொண்டுள்ளது.
கிறிஸ் என்னும் பெண்ணை ஒரு திருடன், மயக்கி அவளை ஒரு ஹிப்னாடிஸ மனநிலைக்குக் கொண்டு சென்று அவளுடைய சொத்துக்கள் மற்றும் சேமிப்பைத் தன் பெயருக்கு மாற்றிக் கொள்கிறான். அவன் அவளுக்கு கொடுத்திருக்கும் ஒரு வகையான பாரஸைட் அவள் வயிற்றுக்குள் இருப்பதால் அவளை திட உணவு தின்ன விடாமல் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ விடுகிறான். அவளிடம் இருந்து அனைத்தையும் வழித்து எடுத்துவிட்ட பிறகு அவளைத் தன் ஹிப்னாடிஸ பிடியில் இருந்து விடுவிக்கிறான். அதுவரை உணவே தின்னாமல் இருந்ததால் சகட்டுமேனிக்கு பசியில் தின்னும் கிறிஸ் தூங்கி விழிக்கையில் அவள் வயிற்றில் இருந்த பாரஸைட் புழுக்களாக மாறி அவள் உடல் முழுது இருப்பதைப் பார்க்கிறாள்.
இங்குதான் ஸாம்பிளர் என்னும் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அவர் worm charmining என்னும் ஒரு முறையின் மூலம் கிறிஸை தன் இருப்பிடத்திற்கு வரவழைத்து, அவள் உடலில் இருக்கும் புழுக்களை பன்றி ஒன்றுக்கு மாற்றி விடுகிறார். இதனால் பன்றிக்கும் கிறிஸிற்கும் ஒரு இணைப்பு ஏற்ப்படுகிறது. அதன் மூலம் அந்தப் பன்றியின் மூலமே ஸாம்பிளர் கிறிஸ் வாழ்வில் நடப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதை மையமாகக் கொண்டு அவர் இசையமைத்து அதை விற்று வாழ்ந்து வருகிறார்.
இந்த ஸாம்பிளர் பின் இந்தப் பன்றிகள் இறக்கும் பொழுது புதைக்காமல், ஒரு பையில் போட்டு ஆற்றில் எறிந்து விடுகிறார். அந்தப் பன்றியில் இருக்கும் பாரஸைட் பன்றியின் புண்களில் இருந்து வெடித்து ஆற்றில் கலக்கிறது. ஆற்றின் ஒரத்தில் இருக்கும் ஆர்ச்சிட் பூக்களை இது நீல நிறமாக மாற்றுகிறது. பின் இந்த ஆர்ச்சிட் பூக்களை பறிக்கும் விவசாயிகள், அதன் மகரந்தத்தை விற்கிறார்கள். இதுதான் அந்தத் திருடன் தன் குறிகளுக்கு கொடுக்கும் பாரஸைடாக பயன்படுகிறது.
இப்படி கிறிஸ் போல பல பேர் பாத்திக்கப்பட, அதில் ஒருவரான ஜெஃப்புடன் கிறிஸ் வாழத் துவங்குகிறாள். இருவருக்குமான ஈர்ப்பு, அவர்கள் எவ்வாறு இந்தப் பெரிய அநியாயத்தைத் தடுக்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
கதை இவ்வளவுதான் என்றாலும் அதை எடுத்த விதம் ஒவ்வொரு இடத்திலும் வரும் அறிவியல் விஷயங்களின் உண்மை, இந்தப் படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது. அதாவது, இதெல்லாம் நடப்பது சாத்தியம். நாளை எனக்கும், உங்களுக்குமே இது நடக்கலாம் என்று பார்ப்பவர்களை நம்பவைத்து, முதுகெலும்பைச் சில்லிட வைப்பதில்தான் ஜெயிக்கிறார் இயக்குனர். இவர்தான் ஜெஃப் கதாபாத்திரத்திலும் நடித்து, படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார்.
ஹென்றி டேவிட் தொரேயூ எழுதிய வால்டன் என்னும் நூல் படத்தில் மிக புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ”நமது உடலில் ஒரு மிருகம் இருப்பதை நாம் உணர்வதுண்டு. நமது தூக்கத்தில் அது விழிக்கிறது. அது ஒரு கிருமி போல வாழும் பொழுதும் சாவிலும் நம்முடன் இருக்கிறது. அதை நாம் தள்ளி வைக்கலாம் ஆனால் அவற்றை மாற்ற முடியாது.” என்பது தான் படத்தின் அடிநாதமே.
இதை எல்லாவற்றையும் தள்ளி வைத்து எளிமையாக படத்தை விளக்க வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்.
உங்கள் அடையாளம் உங்களை உருவாக்குகிறதா? இல்லை நீங்கள் உங்கள் அடையாளத்தை உருவாக்குகிறீர்களா? நீங்கள் உருவாக்கிய அடையாளம் உங்களை மீறிப் போனால் என்னாகும்? அதைவிட உங்களுக்கு அறிமுகமே இல்லாத ஒருவர் உங்கள் அடையாளத்தை மாற்றினால் அது என்ன மாதிரியான மனவலியைக் கொடுக்கும்?
நம் நாட்டில் படித்து விட்டு வீட்டில் இருக்க வைக்கப்பட்ட கோடானுகோடி இல்லத்தரசிகளைத் தான் கேட்க வேண்டும் !!
New Gen தமிழன் பிப்ரவரி மின் இதழில் வெளியான திரைப் பட விமர்சனம் 'அப்ஸ்ட்ரீம் கலர்' Upstream Color