2006ல் பிரொஸன்சித் சட்டர்ஜி நடிப்பில் ரிதுபூர்ணோ கோஷ் இயக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம். ரிதுபூர்ணோ கோஷ் எப்பொழுதும் ஒரு தேர்ந்த கதை சொல்லி. கதை சொல்லுதல் என்பது ஒரு கலை. ஒருவரை ஒரு தேநீர் கடையில் பார்த்து ஒரு கதை சொல்லத் துவங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அவர் பாதியில் எழுந்து செல்லாதிருக்கும் வகையில் கதை சொல்வது எவ்வளவு கடினம்? அதை மிகவும் அநாயசமாக செய்யக் கூடியவர் தான் ரிதுபூர்ணோ கோஷ்.
தோஸார் படத்தின் கதையும் ஒரு சிறுகதையாகத்தான் இருந்திருக்க வேண்டும். படத்தின் துவக்கத்தில் ஒரு விடுதியில் இருந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கிளம்புகின்றனர். விடுதியில் வேலை செய்பவர்கள் அவர்களை ஒரு கணவன் மனைவியாகத்தான் பார்க்கிறார்கள். திரும்ப செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகிறது. பெண் இறந்து விடுகிறாள். ஆண் பலத்த காயங்களுடன் தப்பிக்கிறார்.
அதன் பின்னரே அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல; அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிபவர்கள் என காட்டப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஆண் கௌசிக்கின் மனைவி காவேரி மருத்துவமனைக்கு விரைகிறாள். அங்கு தான் தன் கணவன் தனக்குத் தெரியாமல் அலுவலகத்தில் வேலை செய்யும் மிதாவுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் எனத் தெரிய வருகிறது. பரிதாபத்தைவிட கோவம் மேலோங்க அவர் தன் கணவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றுகிறாள். அலுவலகத்தில் கௌசிக்கிற்கு இருக்கும் நல்ல பெயரால் இந்த விஷயம் மூடி மறைக்கப்படுகிறது.
காவேரி ஒரு நாடக கம்பெனியில் பணிபுரிகிறாள். அங்கிருக்கும் அவளது நண்பர்கள் பிருந்தா மற்றும் பாபி காவேரிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். பிருந்தா பாபியைவிட வயதில் மூத்தவளாக இருந்தாலும், திருமணம் ஆனவளாக இருந்தாலும் பாபியிடம் காதல் கொள்கிறாள். இது காவேரிக்கும் தெரியும்.
இது இவ்வாறிருக்க, விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கணவனின் கதை இன்னும் கஷ்டம். அவர்களது ஒரே மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில், தன் மனைவி தனக்குத் தெரியாமல் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் எனத் தெரியாமல் திடீரென்று அவரின் மரண செய்தியும் அவரது நடத்தையும் அவருக்குத் தெரிய வரும் பொழுது என்ன செய்ய எனத் தெரியாமல் திண்டாடுகிறார். உடல் பசியைத் தீர்க்கவும், மனைவியை பழிவாங்கவும் பரத்தையிடம் செல்லும் பொழுதும், அங்கு இயங்க முடியாமல் தவிப்பதும், அந்தக் கணவர் கதாபாத்திரத்தின் பேரில் ஒரு பெரிய பரிதாபத்தை ஏற்பட்டுத்துகிறது.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த கணவனை கவனிக்க பிடிக்காமலும், கவனிக்காமல் இருக்கவும் முடியாமல் காவேரி இருதலைக் கொள்ளி எறும்ப்பாய் தவிக்கிறார். தன்னால் ஒரு பெண் இறந்து போனது மட்டுமல்லாமல் அவள் குடும்பம் சிதறி அவர்கள் தவிப்பதை எண்ணிக் கௌசிக்கும் வேதனைப்படுகிறான். ஒரு கட்டத்தில் தன்னை விட என்ன அவளிடம் இருந்தது எனத் தெரிய, கணவனின் கைப்பேசியிலிருந்து காவேரி அந்தப் பெண்ணின் எண்ணிற்கு அழைக்கிறார். ஒரு அழகிய பறவைப் போல் அந்தப் பெண்ணின் குரல் ஒலிக்கிறது. ஒரு விதமான அசூயையுடன் காவேரி போனை அணைக்கிறாள். காவேரி இல்லாத சமயம் மிதாவின் குரலை ஒரு முறைக் கேட்க கௌசிக் அதே எண்ணிற்கு அழைத்துப் பார்க்கிறாரன். அவளது குரலைக் கேட்க கண்ணீர் பெருகுகிறது. ஒரே செயலை இருவர் வேறு வேறு நோக்கத்திற்காக செய்யும் பொழுது அது அவர்களை எவ்வாறு ரியாக்ட் செய்ய வைக்கிறது என்பதை இயக்குனர் மிக அழகாக காட்டியுள்ளார்.
காவேரியும் இறந்துபோன பெண்ணின் கணவனும் சந்திக்கும் காட்சி இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிப் பேசாமல் சுற்றிச் சுற்றி வேறு விஷயங்களைப் பேசினாலும் எப்படி இந்த நிலையை ஒருவர் எதிர்கொள்கிறார் என இன்னொருவர் அறிய விழைவது அற்புதமான ஒரு விஷயம்.
“உயிரோடு இருந்தால் கேட்கலாம், சண்டையிடலாம். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போவது கொடுமை” என அந்தக் கணவர் சொல்ல, காவேரி “உயிரோடு இருந்தால் கேட்கவும் முடியாமல், கேட்காமல் இருக்கவும் முடியாமல் இருப்பதை விடவா கொடியது” எனக் கேட்பார். ஆனால் பின் கௌசிக் தனது பழக்கத்தைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்ட பிறகு ஒரு பெண் என்பதைத் தாண்டி மனைவி என்கிற முறையில் காவேரி தன் கணவனை ஏற்றுக் கொள்கிறாள். இதே நிலை அந்தப் பெண்ணிற்கும் நடந்திருக்குமா என யோசித்துப் பார்த்தேன். கேள்விக்குறி தான் மிஞ்சுகிறது.
படத்தின் பலமே ஒருவரும் ஒருவரைப் பற்றியும் ஜட்ஜ் பண்ணாமல், சம்பவத்தை சம்பவமாக பார்ப்பது தான். இதை விடுத்து நான் செய்தால் என்ன செய்திருப்பாய், நான் எவ்வளவு நல்லவன் எனக்குப் போய் இப்படி ஒரு மனைவி என எந்த ஒரு வசனமோ காட்சியோ இல்லாமல் இருப்பது தான். படத்தில் எல்லோருடைய நடிப்பும் படத்திற்கு ஏற்றார்போல் கச்சிதமாக பொருந்தி வந்துள்ளது. பிரொஸன்சித் சட்டர்ஜி வங்காளத்தில் சிறுத்தை, சிங்கம் படங்களில் நடித்திருந்தவர் என்பதால் அவரிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தவறு செய்துவிட்டு செயல்பட முடியாமல் மனைவியை சமாதானப்படுத்த கஷ்டப்படும் கணவனாக அவரது நடிப்பு அற்புதம். இந்த வாக்கியத்தை எழுதும் பொழுதுதான் அந்த கதாபாத்திரத்தின் ஆழம் புரிகிறது. காவேரியாக கொண்கொணாசென் ஷர்மா. சொல்லவே தேவையில்லை. படம் முழுக்க இவரது ராஜ்ஜியம் தான். கணவன் செய்த தவறுக்கு அவரை கொல்லும் அளவுக்கு கோபம் வந்தாலும் உடல்நிலை சரியில்லாததால், அவரது சகோதரரையும், அலுவலக மேலாளரையும் வறுத்து எடுக்கும் இடங்களில் மின்னுகிறார்.
முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படத்தைல் ஒளிப்பதிவாளருக்கு பல சவாலான விஷயங்கள். திறம்பட செய்திருக்கிறார். கௌசிக் மற்றும் அவரது காதலி பற்றிய சின்ன சின்ன பிளாஷ்பேக் காட்சிகள் அற்புதம். அதிலும் ஒரு கவிதை,
“நீ என்னை முத்தமிட்டாய்,
முத்தங்கள் எனக்குப் புதிதில்லை.
ஆனால் நீ என்னை முத்தமிட்ட பொழுதுதான்.
இந்தப் புனல் கடல் சேர்ந்தது” என காட்சியுனூடே வருகிறது. கடைசியில் காவேரி தன் கணவனைப் பற்றி அழும்பொழுதும் வருகிறது.
கவிதையிலும் காதலிலும் நல்லது, கள்ளம் என இருக்கிறதா என்ன?
Comments
வணக்கம்
பட விமர்சனம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி.. மேல் விபரங்களுக்கு.http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-