காசி நாடனும் கிராமியப் பாடலும்

காரின் குளிரில் பாதங்கள் விரைத்து விட்டன. பயணத்தில் படிக்க எனக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த மாதிரியே இருந்தன. ஒரு பக்கம் கூட புரட்டவில்லை. காரில் ஏறியவுடன் அப்படி ஒரு தூக்கம். இப்படிப்பட்ட காரில் எல்லாம் நம்மையும் ஏற்றிக் கொள்வார்களா என பள்ளிக் காலத்தில் காரின் பின் ஓடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. ”அதெல்லாம் மறந்துடு. சாதிச்சாச்சு” மனசு சொல்லியது. இல்லை.. இன்னும் ஒரே ஒரு படி.

புன்னைவயல் கிராமத்தில் கார் திரும்பிய பொழுது பத்து சிறுவர்கள் பின்னால் ஓடி வந்தனர். டி.வி. எல்லாம் வந்த பிறகும் காரைப் பார்க்காதது போல ஒடி வருவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சென்ற வாரம் நாக்கு தள்ள பணம் கட்டி ஐ10 வீட்டிற்கு கொண்டு சென்ற போது மகன் தஷ்வந்த் “என்னப்பா வண்டி இது?? ஆடி இல்லையா?” என சொல்லிக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தது நினைவுக்கு வந்தது.

தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை. வீடு மனைவி மக்கள். இது தான் வாழ்க்கை. சென்ற வாரம் சீரியல் பற்றி டைரக்டரிடம் பேசிக் கொண்டிருக்கையில் துறைத்தலைவர் கூப்பிட்டார்.

“நம்ம வெள்ளிகிழமை ரியாலிட்டி ஷோ இன்னும் 13 வாரத்துல முடியப் போகுது” கவனமாக தலையில் இருக்கும் நான்கு முடிகளையும் அதனதன் இடத்தில் வைத்தார்.

“ஆமா சார், இப்பவே எல்லாரும் யார் ஜெயிச்சானு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்காங்க”

“ஆமா.. நீங்க 13 வாரத்த பத்தி யோசிக்குறீங்க. நான் அடுத்த வருஷத்த பத்தி யோசிக்குறேன்.”

”இப்ப பாட்டு பாடுறாங்க. அடுத்து டான்ஸ். இதைத் தான சார் 5 வருஷமா பண்ணிட்டு இருக்கோம்.”

“இல்லை.. போன தடவையே டி.ஆர்.பி ரொம்ப குறைஞ்சுடுச்சு. அதுக்காகத் தான் ஒருத்தன் காலை எல்லாம் உடைஞ்ச மாதிரி நடிக்க வெச்சோம். ஐ ஹாவ் அன் ஐடியா”

இவர் இப்படிச் சொன்னாலே ஏதோ ஒரு ஆங்கில நிகழ்ச்சியோ இல்லை ஹிந்தி நிகழ்ச்சியோ தமிழில் வரப்போவது உறுதி.

“நாட்டுப்புறக் கலைஞர்களைக் கூட்டி வந்து ஒரு புரோகிராம் பண்ணா என்ன?”

“சார்! பொங்கலுக்கு காலைல அவங்க நிகழ்ச்சி பண்ணாலே எவனும் பாக்க மாட்டான். இதுல யாரு காசு போடுவா?”

“இதை ஒரு ஐ.பி.எல் மாதிரி பண்ணலாம். வாடிப்பட்டி மேளத்துக்கும் தஞ்சாவூர் தவிலுக்கும் போட்டி. அப்படி.”

“சரி சார்!”

“நான் எதுக்கு உங்ககிட்ட இதை சொல்றேன் தெரியுமா? இதை நீங்களே எடுத்து நடத்தணும்னு மேனேஜ்மெண்ட் ஆசைப்படுறாங்க. இன்ஃபாக்ட், இது லேட். பிளான் எடுத்துட்டு வாங்க. ஸ்பான்சர்ஸ் நான் பாத்துக்குறேன்”

அப்போ ஆரம்பித்தது என் பயணம். தமிழ்நாட்டின் மூலை முடிக்கெல்லாம் இசைத் தேடி அலைந்தேன். இளைஞர்களுக்கு சினிமா பாட்டும் திரை இசை சம்பந்தப் பட்ட வாத்தியங்களையும் தவிர எதுவும் தெரியவில்லை. பெரியவர்கள் மட்டுமே ஒரு அர்ப்பணிப்போடு செய்தார்கள். பறை, தம்பட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயில், வில்லிசை, மத்தளம், நாதஸ்வரம் என அவர்களின் வாத்திய வரிசையே என்னை மூச்சு முட்ட செய்து விட்டது.

கல்லூரியில் இருந்து வேலைக்கு புதிதாக சேர்ந்த இருவர் எனக்கு உதவி. ஒருவன் பெயர் கிருஷ், மற்றவன் யோகி. நவயுக இளைஞர்கள். 13 வருடங்களில் எவ்வளவோ மாறி விட்டன. ஐடியா சொன்னவுடன் பல ஆங்கில சேனல்களில் இருந்து நோட்ஸ் எடுத்து செட், பிராப்ஸ் எல்லாம் ரெடி செய்து விட்டனர். அவர்களுக்கு சுத்தமாக சங்கீத ஞானம் இல்லாததால் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க மட்டும் நான். புன்னைவயல் எனது கடைசி ஸ்டாப்.

“இங்க காசி நாடன்னு??” டீக்கடையில் டிரைவர் விசாரித்தார். டீ சொன்ன போது எனக்கும் டிரைவருக்கும் பிளாஸ்டிக் கோப்பையில் வந்தது. ஆளைப் பார்த்து ஜாதி சொல்லத் தெரியவில்லை போல.

“அவரு இப்ப பனை ஏறுரதில்லை. வீட்ல தான் இருக்கணும். தெக்கால போயி கடைசி திருப்பம்” பாலிலிருந்து கண்ணை எடுக்காம்லே பதில் சொன்னார் கடைக்காரர்.

சிறிய வீடு. முன்னால் திண்ணையில் சட்டையில்லாமல் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர். டிரைவர் சென்று உறுதி செய்ததும் நான் இறங்கிச் சென்றேன்.

“என் பேரு திலீப். சென்னைல டி.வி ஆபீஸ்ல இருந்து வரேன். போன் வந்திருக்குமே” எனச் சொல்லி முடிக்கும் முன் கையில் மோர் வந்தது.

“சொன்னாங்க. அவங்க சொன்னது எனக்கு புரியல தம்பி.”

“ஓண்ணுமில்லையா, சென்னைல ஸ்டூடியோ இருக்கும். நீங்க அங்கப் பாடணும். அவ்வளவு தான்”

“சினிமாவா?”

“இல்லீங்க ஐயா. டீவி தான். நீங்க கச்சேரி பண்ணுவீங்கள்ல அது மாதிரி தான்.”

சிரித்தார். ”இங்க கச்சேரி பண்ணியே பல வருசம் ஆச்சு தம்பி. மொதல்ல சினிமா பாட்டுக்காரவுக வந்தாக, பொறவு சினிமா பாட்டுக்கு ஆடினாவ.. இப்பல்லாம் ஒண்ணு ரெண்டும் சினிமால நடிச்சவுகளே வந்து ஆடுதாங்களே. நீங்க சொல்றது நம்ப முடியல.”

”அப்படி இல்லை ஐயா இது. நம்ம மண்ணோட பாட்ட எல்லா ஊரூக்கும் கொண்டு போகணும்னு தான் இதைப் பண்ணுறோம். எனக்காக நீங்க ஒரு பாட்டுப் பாடி காமிச்சீங்கன்னா, அதை ரெகார்ட் பண்ணி எங்க மேலதிகாரிக்கு போட்டு காமிப்போம்.”

கணீர் குரலில் ஆரம்பித்தது பாட்டு. என் அலைபேசியில் பதிவாகத் தொடங்கியது.

காசுமில்லை பணமுமில்லை

கரைச்சலுக்குப் பஞ்சமில்லை

வேலை இல்லை வெட்டி இல்லை

வெட்டி நியாயம் தீர இல்லை

சோறு இல்லை கொழம்புமில்லை

சாதி மட்டும் பெரிசு புள்ள

மானமில்லை ரோசமில்லை

மாண்புமிகு கிராமத்தாரே!!

”பதிவாயிட்டுதுங்களாயா??” என் கையிலிருந்த அலைபேசியை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“பதிவாயிட்டுதுங்க.. ஆனா இந்த மாதிரி இல்லாம எதாவது காதல் பாட்டா..”

”சரிதான் இந்த காலத்து பசங்களுக்கு கருத்து எங்கப் புடிக்குது?”

“அப்படியில்லையா, கிராமம், சாதி, வறுமை எல்லாம் ரொம்ப பழசில்லீங்களா??”

“காதல் மட்டும் என்னவாம்?” ஏளனச் சிரிப்புடன் பாடத் தயாரானார்.

வஞ்சிக் கூந்தல் நெழலுல

நெஞ்சி குழி பொத்தலுல

கஞ்சி மறந்தேண்டி புள்ள கஞ்சி மறந்தேண்டி

காளை மாட்டை கன்னத்தில

கிள்ளிப் போகும் கிளிப்புள்ள

கஞ்சி மறந்தேண்டி புள்ள கஞ்சி மறந்தேண்டி

உள்ளிருந்து மெலிதான ஒருச் சிரிப்பு சத்தம் கேட்டது.

“இந்தப் பாட்டுக்கு வயசு 35. அதான் சிரிக்கா.” எதனாலோ அவர் மீசை நுனி மேலே சென்றது போல ஒரு தோற்றம். “சாப்புடுதியளா??” உள்ளே இருந்து சத்தமும் மீன் குழம்பு வாசமும் வந்தது.

Whatsappல் யோகிக்கு இரு பாடல்களையும் அனுப்பிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். வாழை இலையில் கொள்ளாமல் சோறு வைத்து, மீன் குழம்பையும் அதன் மேல் ஊற்றும் பொழுதே என் வாயில் எச்சில் ஒழுகியது.

“நிலத்தில தண்ணியே இல்ல தம்பி! எனக்கு மட்டும் 35 தென்னை இருந்தது. கீழ தண்ணி இருந்தால்லா மேல வளரும்? கொஞ்சம் கூட இல்லை. அதுக்கப்புறம் தான் பனை ஏறப் போனேன்.”

டிரைவர் ருசியில் திளைத்து விட்டார். சென்னையில் சாப்பிட்ட நாக்கு. புன்னைவயலுக்கு பஞ்சம் வராமல் விடாது.

”சோத்துக்கே இல்லாதப்ப என்ன தம்பி பாட்டும் கூத்தும். காலைல இருந்து ஒரு 12 மரம் ஏறி இறங்கினா தான் வீட்டுக்கு சோறு. அப்ப அலுப்புக்கு பாடுறது தான் பாட்டு.”

“அலுப்புக்கு வேற ஒண்ணும் பண்ணுறதில்லையா?” டிரைவர் கேட்டார்.

“பழக்கமில்லை தம்பி”

கை கழுவி விட்டு வாசலில் வரும் முன்னே யோகியிடமிருந்து தகவல் வந்து விட்டது. காசி நாடன் சென்னை வர வேண்டி இருக்கும்.

“இதப் பாருங்க தம்பி! நான் இதுவரைக்கும் பாட்டுக்குனு யார்ட்டயும் பத்து பைசா வாங்குனதில்லை. இப்ப பனை ஏறக்கூடாதுன்னு வேற தடை போட்டிருக்காங்க. ரொம்ப கஷ்டம். நீங்க பாத்து பண்ணாதான் தம்பி வயிறு நிரையும். எனக்காக கேக்கலை. தோப்பிருக்கும் போது தொங்கட்டானும், பட்டுச் சீலையுமா அலைஞ்சவ, இப்ப ஒத்த சேலையோட வீட்டுல அடைஞ்சு கிடக்கா, அவளுக்காச்சும் எதுனா செய்யணும்.”

“ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூவா தருவோம் ஐயா! நீங்க நல்லா பாடி நிறைய பேருக்கு உங்கள பிடிச்சுப் போச்சுன்னா, கச்சேரிக்கெல்லாம் கூப்பிடுவாங்க. சினிமால கூட பாட வாய்ப்பிருக்கு.”

“அய்யே நமக்கு அது எல்லாம் ஆசை இல்லீங்க. ராஜாவ மட்டும் ஒரு தடவை பாத்திரணும். வேற எதும் வேணாம்”

வெத்தலை முடிந்து கார் ஏறுகையில், கார் வரை வந்தார் காசி நாடன். “ஒரு பத்து நாளைக்கு கண்டிப்பா வேலை இருக்கும்லா? துணி எடுக்கணும் அதான் கேட்டேன்” கையில் அவர் மறுக்க மறுக்க ஆயிரம் ரூபாய் வைத்து விட்டுக் கிளம்பினேன்.

எதிர் பார்த்ததை விட பெரிய துவக்கம். ஊர் முழுக்க கிராமிய வாத்தியங்கள் கேட்கத் துவங்கின. ஊர் கொடைக்குச் செல்லாத இளசுகள் மொபைலில் எங்கள் நிகழ்ச்சியில் பாடியவர்கள் குரல் காலர் ட்யூனாய் ஒலிக்கத் துவங்கியது. மூன்றாம் எபிசோடில் காசி நாடன் பாட வேண்டும். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து காரில் வந்து இறங்கினார்.

“என்ன தம்பி, பிளசர் எல்லாம் அனுப்பிட்டீங்க. எனக்கு இது தான் மொத திரிப்பு”

வாசலில் வைக்கப்பட்டிருந்த குளிர்பான கம்பெனி போர்ட் அவர் கண்ணில் பட்டதும் முகம் மாறி விட்டது.

“இவன் இங்க என்ன பண்ணுதான்?”

“அவங்க தான் ஸ்பான்ஸர்”

“அப்படின்னா?”

”நம்ம படம் புடிக்க அவங்க காசு குடுப்பாங்க. பதிலுக்கு நம்ம விளம்பரம் போடணும். அதனால அவங்களுக்கு வியாபாரம் கூடும்.”

“அப்ப எனக்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூவா இவனா குடுக்கான்?”

“அவங்களும்!” அவரைத் தாண்டி ஸ்டூடியோ கேமரா கண்ட்ரோல் ரூமுக்குள் நுழைந்தேன். யாரும் இன்னும் வரவில்லை.

“தம்பிகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” இப்படி ஆரம்பித்தால் எங்கு செல்லும் என எனக்குத் தெரியும், ஸ்டூடியோவை பார்த்து ரேட்டை ரெண்டு மடங்கு ஏத்திவிடுவார்கள்.

“என்ன விஷயம்ணே? காசு முடிவு பண்ணி செக் எல்லாம் போட்டாங்க. இனி மாத்த முடியாது”

“அதில்லை தம்பி. ஊருக்கு போக காசும் உங்க விலாசமும் குடுத்தீங்கன்னா போதும். மாசம் பொறந்ததும் பணத்த அனுப்பிடுதேன்”

”பயப்படாதீங்கண்ணே. நீங்க பாட்டுக்கு உக்காந்து பாடுங்க. நாங்க பாத்துக்குறோம். அரை மணில பழகிடும்”

“பயமில்லை தம்பி. அந்த கலர்  கம்பெனிக்காரன் காசுல எனக்கு சாப்பிடப் பிடிக்கல” கண்ணில் கண்ணீர் எட்டிப் பாத்தது.

“நீங்க சொன்னீங்களே, வியாபாரம் கூடும்னு, அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா, எங்கள மாதிரி கிராமத்துக்கு வருவானுங்க, பாக்டரி போட்டுத் தண்ணி எல்லாம் உறிஞ்சுவானுங்க. என்ன மாதிரி ஊர்ல தோப்புக்காரனா திரிஞ்சவன் எல்லாம் கொத்தனாரா அனுப்புவானுங்க.” அழுதே விட்டார்.

“இப்படி எத்தன பேர் தெரியுமா? எனக்கு மட்டும் ஊரை விட்டுப் போகப் பிடிக்காம அங்கேயே தங்கிட்டேன். இன்னிக்கு காலைல ஸ்டேஷன்ல எங்க ஊர் பண்ணைக்காரன் ஒருத்தன் கூலியா பாத்தேன். காசே வாங்காம என் சாமானெல்லாம் தூக்கி கார்ல வெச்சுட்டு, அண்ணே, நீயாச்சும் நல்லா இருக்கியேனு சிரிக்கான். இதெல்லாம் யாரால?”

“ஐயா! நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கும் காசு தேவை. ஒரு பத்து பன்னிரெண்டு நாள் பொறுத்துகிட்டா, காசோட வீட்டுக்கு போயிரலா. வீட்டம்மாவ நெனச்சுப் பாத்தியளா?”

“அவன் காசுல எனக்கு தண்ணி கூட கழுத்துல எறங்காதுய்யா. எம்மூதிய நான் பாத்துகிடுதேன். எனக்கு கொஞ்சம் ஊர் போக காசு மட்டும் குடுங்கையா”

“இத மாதிரி வாய்ப்பு கிடைக்குமா உங்களுக்கு? எத்தனை பேர் அலையுறான் தெரியுமா டிவில வர? சுளுவா கிடைச்சதால எளப்பமா போச்சோ?” என் குரல் என்னையறியாமல் உயர்ந்தது.

”சரிதான் யா! ஆனா எல்லாம் போக மானம் ரோசம் மட்டும் தான் பாக்கி. அதை 30 ஆயிரம் ரூவாய்க்கு அடமானம் வைக்க முடியாது. நான் வரேன்”

“ஒரு நிமிஷம் இருங்க” என் பாஸை பார்த்து நிலமையை விளக்கினேன்.

“அவங்க தான் மெயின் ஸ்பான்ஸர்ஸ். பேக் தட் ஓல்ட்மேன் ஹோம். வி ஆர் பிராக்டிகல் மென். நோ ஸூடோ ஆக்டிவிஸ்ட்”

காசி நாடனுடம் ஆட்டோ வரைக்கும் சென்றேன். வந்து போன செலவுக்கு 6 ஆயிரம் கையில் வைத்தேன். ஆட்டோவில் ஏறியவர் அவசரமாக இறங்கினார்.

“தம்பி!! தம்பி!” தோளின் பின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். காசி நாடன் கையில் ஒரு தூக்கு வாளியுடன் நின்றிருந்தார்.

“அன்னிக்கு கொழம்புக்கு அள்ளி அள்ளி தின்னீங்களாம். உங்களுக்கு குடுத்து அனுப்பிச்சா. மறந்தே போனேன். மறுக்கா ஊர் பக்கம் வரும் போது பொஞ்சாதி பிள்ளைகள கூட்டிட்டு வாங்க”

ஆட்டோவில் ஏறியவரை வியப்புடன் பார்த்தேன். ஆஃப்டர் ஆல், வி வேர் பிராக்டிகல் மென்.

Comments

 1. Ravi

  BP, very good story and well written. I liked these lines..

  அலுப்புக்கு வேற ஒண்ணும் பண்ணுறதில்லையா?” டிரைவர் கேட்டார்

  கவனமாக தலையில் இருக்கும் நான்கு முடிகளையும் அதனதன் இடத்தில் வைத்தார்.

 2. ரமேஷ்

  அருமை-யான நடை.ஒரு பாரதிராஜா படம் பார்த்த எபக்ட் ..அவ்ளோ மண்வாசனை.

  மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்

 3. மாயா

  மனிதர்கள் பலர் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டாலும் ஒரு சில மனிதர்கள் மாறுவதில்லை.. அவர்களது மனதும் மனதின் உணர்வுகளும் அப்படியே… மிக அருமையான பதிவு…

  1. Bragadeesh Prasanna

   எது போன்ற மாற்றங்களுக்கு நம்மை மாற்றிக் கொள்ளலாம்? அதனால் நாம் அடைவதை விட இழப்பது பெரிதா என அனைவரும் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். நன்றி மாயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.