அன்னை மெஸ் – பாகம் 6

முந்தைய பதிவுகள்.

இப்ப எங்க மெஸ் முழு நீள மெஸ் ஆயிடுச்சு. ஒரு வெட்டு மாஸ்டர். சப்ளை பண்ண ஒரு ஆள். சமைக்க ஒரு மாஸ்டர். கல்லாப் பெட்டில அப்பா. அப்ப அப்ப உதவிக்கு நாங்கனு வேலை பாக்குறவங்க ஜாஸ்தி ஆகிட்டாங்க. ஒரு அளவுக்கு மெஸ் நல்லா பிக் அப் ஆனப்புறம், அப்பாவை மாத்தி விட ஆள் தேவை பட்டுச்சு. அப்போ தான் எங்க வீட்டுக்கு தரிசனம் தந்தார் ஸ்ரீலஸ்ரீ ராஜா ஸ்வாமிகள்.

சாமியார் எல்லாம் ஒண்ணும் கிடையாது. எங்க பாட்டியோட தம்பி. கல்யாணம் பண்ணிக்கலை. எப்ப பாத்தாலும் எதாவது கோயில் குளம்னு சுத்திட்டு இருப்பார். பாட்டி இருந்த வரைக்கும் அப்பப்ப வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருந்தார். எப்ப வந்தாலும் எதுனா ஒரு கோயில் பிரசாதம் கண்டிப்பா இருக்கும். அப்படி ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்தப்போ நாங்க மெஸ் வெச்சிருந்தது அவருக்கு தெரிய வந்தது.

அப்பாவ அவருக்கு மார்க்கெட்டிங் மானேஜராத் தான் தெரியும். சொந்தமா கடை வெச்சிருந்தது தெரிஞ்ச உடனே என்ன தோணிச்சுனு தெரியலை. அப்பாகிட்ட நைட் பேசிட்டார்.

“பாலசந்தர்! நான் இன்னும் மதுரை, பழநினு சுத்திட்டு தான் இருக்கேன். கடைல எதுனா வேலைப் பாக்குறேன். நான் ஒண்டிக்கட்டை. உங்க கூட இருந்துடுறேன்”

“இல்லை மாமா! இந்த மாதிரி வேலை எல்லாம் உங்களுக்கு எவ்வளவு தூரம் ஒத்து வரும்னு தெரியலை”

“மதுரைல ஆரியபவன் ஓட்டல் மானேஜர் எனக்கு நல்ல பிரண்ட். எப்பவும் அவர் கடைலதான் இருப்பேன். எனக்கும் இதெல்லாம் தெரியும்”

அப்பாவுக்கும் ஒரு ஆள் தேவைப்பட்டுச்சு. கடந்த 4 மாசமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். சரினு சொல்லி அடுத்த நாள் காலைல இருந்து கல்லால உக்கார சொல்லியாச்சு. இதுல மணிக்கு மட்டும் தான் ரொம்ப கஷ்டம். நம்ம ராஜா தாத்தா பட்டையும் ஜவ்வாதுமா நல்ல சிவகடாக்‌ஷமா உக்காந்திருப்பாரா, அவர் முன்னாடி பீடி பிடிக்க எல்லாம் மணி ரொம்ப கஷ்டப்பட்டார். இருந்தாலும் ரெண்டு பேரும் கொஞ்ச நாள்ல நெருக்கமாயிட்டாங்க.

அவர் வந்ததால ரெண்டே ஜீவன் மட்டும் தான் கஷ்டப்பட்டுச்சு. அது நானும் எங்க அண்ணனும் தான். காலைல அஞ்சு மணிக்கு எழுந்து பாடுறது ஆகட்டும், காலைல எதுனா பொண்ணை எதேச்சையா நான் பாக்குறதை நோட் பண்றதாகட்டும், அவர் அலப்பறை தாங்க முடியலை.

ஒரு நாள் கடைக்கு காலைல போனா, மணி வெளில பீடி குடிச்சுட்டே “என்ன பிரசன்னா, அந்த ஹோட்டல்காரன் பொண்ணைப் பாத்து சிரிச்ச போல?”

“அதை அந்த பொண்ணே பாக்கலை, நீ எங்க பாத்த??”

“எனக்கு மட்டுமா, ஆர்டீஓ ஆபீஸுக்கே தெரியும்”

பாத்தா எங்க தாத்தா தான் நான் பாத்ததையும் சிரிச்சதையும் எனக்கு முன்னாடியே வந்து ஊர் பூரா சொல்லியிருப்பார். ஏற்கனவே நமக்கு வீட்ல ரொம்ப நல்ல பேர். இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் சிதைச்சு சின்னாபின்னமாக்குற வேலைய முழு மூச்சா பண்ணிட்டிருந்தாப்புல.

மதியம் சாப்பாடு நடந்துட்டு இருக்கும்போது மணி அவசரமா, சைக்கிள் ஏறிப் போய் திரும்புனாப்புல. கடைல ஆள் இல்லை. சப்ளை பண்ற வேலை நம்ம தலைல விழுந்துட்டு.

“எங்க போனீங்க! ரெண்டு பேர் பார்சலுக்கு நிக்கான். லைன்ல எட்டு எண்ணம் இலை கிடக்கு. யார் இதெல்லாம் பாப்பா??”

“சோறு வெச்சா போதுமா? அப்பளம் வேணாமா?”

“40 சாப்பாட்டுக்கு 50 பொறிச்சு வெச்சோம்ல?”

“என்னிய கேட்டா?? வெளில இருக்குற சாமியார கேளு” தாத்தாவை கை காமிச்சார் மணி.

பக்கத்துல போய் பாத்தா ஒரு கேரி பேக்ல அப்பளத்த பொடியாக்கி வெச்சு தின்னு தீத்துகிட்டிருந்தார் மனுஷன். அப்பாகிட்ட சொன்னேன்.

“அப்பளம் சாப்பிடறதுல என்னடா குறைஞ்சிடப் போறோம். கொஞ்சம் ஜாஸ்தி பொறிக்க சொல்லு”னு சொல்லிட்டு போயிட்டார். அப்பாக்கு இருந்து இருந்து இப்பத்தான் மாத்தி விட ஒரு ஆள் கிடைச்சிருக்கு. அதனால ஒண்ணும் சொல்றதுகில்லை.

காலைல வெளில கடை போடும்போதும் சப்ஜாடா அங்க வந்து கல்லா கிட்ட உக்காந்துப்பார். பிளேட், கரண்டி தொடணுமே ம்ஹூம்! கேட்டா “எங்கம்மா என்னை எப்படி வளத்தா தெரியுமாடா! நானெல்லாம் தட்டுல சாப்பாடு போட்டு சாப்பிட்டதேயில்லை”

‘நேரா உலையிலயே கை வெச்சிருவியளோ?”

“இல்லைடா எங்கம்மா ஊட்டுவா”

“ஊருக்குள்ள அப்படி சொல்லலையே”

“ஊர் ஆயிரம் சொல்லும்டா, சரி அங்க சாம்பார் ஊத்து”னு பேச்சை மாத்திடுவார்.

ஒரு தடவை இப்படித்தான், இவரு வர்றாருன்னு சொன்னவுடனே மணி ஏதோ வேலை சொல்லி தப்பிச்சுகிட்டான். கடைக்கு போய் நான் தான் மாட்டிகிட்டேன். எத்தனை ஆள் வந்தாலும் அசரமாட்டார் நம்ம தாத்தா. சேரைக் கொஞ்சம் தள்ளிப் போட்டு பராக்கு பாக்க ஆரம்பிச்சுடுவார். நான் தான் சப்ளை பண்ணி, பார்சல் கட்டி, காசும் வாங்கிப் போடணும். ஒரு தடவை இப்படித்தான், ரெண்டு பொங்கலையும், சாம்பாரும் பார்சல் கட்ட பாடா பட்டுகிட்டிருந்தப்போ, “பிரசன்னா! அங்க சாம்பார் ஊத்தணும்”னு கால் மேல கால் போட்டு சொன்னார். எனக்கு வந்ததே கோவம். கண்டாமேனிக்கு கத்திட்டேன். அதுல இருந்து என் கூட வெளில கடை போட மணிதான் வருவாப்புல.

”என்னடே அப்படித் திட்டிபுட்ட! என்ன இருந்தாலும் பெரிய மனுஷன்லா”

“ஏன் கடைல வந்து உனக்கு தொந்தரவு குடுக்குறாப்புலயா?”

“கண்டுபிடிச்சிட்டியோ”

கடைல போய் உக்காந்தாலும் ஒரு பெரிய பிரச்சினை வந்தது. எங்கப்பா சொந்தம்னு வரும்போது கணக்கு பாக்க மாட்டாரு. கணக்குனு வரும்போது சொந்தத்தையே பாக்க மாட்டார். ராஜா தாத்தா கணக்குல எல்லாம் கை வைக்கல, ஆனா கணக்கெழுதுற நோட்டுல ஆதி காலத்துல உபயோகப்படுத்தின வட்டெழுத்துகளா எழுதி வெச்சிருப்பார். ஒரு தடவை நான் கூட நோட்டைப் பாத்து “அடேங்கப்பா! 80 சாப்பாடு போயிடுச்சா”னு பாத்தேன். பாத்தா தலைவர் 20 தான் அப்படி எழுதி வெச்சிருந்ததார். இதனாலயே எங்கப்பாக்கு, நைட் கணக்கு முடிக்க கூடுதலா ரெண்டு மணி நேரம் ஆச்சு.

வெளிக்கடைக்கு நானும் மணியும் ஒரு நாள் போயிட்டோம். அண்ணன் மளிகை வாங்க போயாச்சு. அப்பா வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வந்துகிட்டு இருந்தாங்க. அப்போ ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர் ஒருத்தர் வந்து அப்பா கிட்ட 100 ரூபா கேட்டார்.

“என்னத்துக்கு இப்ப ரூவா?”

“உங்க கடைக்கு ஆள் சொல்லி அனுப்பிருக்கேன்ல”

“அதுக்கு நூறு ரூவாயா?”

“ஒண்ணு ரெண்டு இல்லை தலைவரே! 50 சாப்பாடு. ஷூட்டிங்கு எடுக்குறவங்களுக்கு”

எங்கப்பாக்கா ஒரே சந்தோஷம். அவன் கைல 100 ரூவா குடுத்துட்டு கடைக்கு போயிருக்கார். நம்ம தாத்தா மட்டும் ஜம்னு உக்காந்திருக்கார்.

“சாப்பிட ஆள் வந்தாங்களா?’

“இல்லையே”

“சும்மா சொல்லாதீங்க. இப்ப தான் புரோக்கர்ட பேசிட்டு வந்தேன்.”

“ஆங்! ஒருத்தன் வந்தான். 60 சாப்பாடு வேணும்னு கேட்டான். கடைல ஆள் இல்லையா, அதான் இல்லைனு சொல்லி அனுப்பிட்டேன்”

“ஆள் இல்லைனா என்ன? உக்கார வைக்க வேண்டியதுதான! மணிய கூப்பிட்டா வந்து பார்சல் பண்ணப் போறான்” எங்கப்பாக்கு கோபம்.

“அதெல்லாம் எனக்கெப்படி தெரியும் பாலசந்தர்! மதுரைல…”

எங்கப்பா அங்க நிக்கவே இல்லை. நேரா வெளில வந்து எங்கிட்ட சொன்னார். நான் மணி சைக்கிள எடுத்துட்டு எங்கெல்லாமோ அந்தாளைத் தேடி சுத்தினேன். கிடைக்கவேயில்லை. கடைசில அவங்க வேற கடைல வாங்கிட்டாங்கனு மட்டும் தெரிஞ்சது.

அதுல இருந்து அப்பா அவரை நம்பி கடைய விடவே இல்லை. எப்பவும் கடைலதான் இருந்தாங்க. தாத்தாக்கும் கடுப்பாயிடுச்சு. அப்பா கிட்ட வந்து கிளம்புறேன்னு சொல்லிட்டு, “பாலசந்தர். நான் இங்க இருந்து பழநிக்கு பாதயாத்திரை போறேன். இங்க இருந்த ஒரு மாசத்துக்கு எனக்கு ஒரு பத்தாயிரம் குடுத்துடுவீங்களா?”னு கேட்டார். அவரால ஆன நஷ்டம், தங்கின செலவு, சாப்பிட்ட அப்பள கணக்கு இதெல்லாம் சொன்னப்புறம் அவர் தான் ஒரு ரெண்டாயிரம் தர வேண்டி இருந்தது. குடுக்காமலே போயிட்டார்.

அதுக்கப்புறம் யாரையும் அப்பா நம்பவே இல்லை. கடைல அவர்தான் உக்காந்திருப்பார். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி!

Comments

 1. மதுரக்காரன்

  ஏலேய்!! “புதிதாய் பதிக்கப்பட்டவை”ல வந்துட்டு இந்த போஸ்ட்டு!! வாழ்த்துக்கள்.. 🙂

  நல்லா போகுதே கதை.. ஷார்ட் பிலிம் போட்டுரலாமே. 😀

  1. --- :) ----

   நன்றி தலைவா! குறும்படம் எடுக்குறது நல்ல யோசனை தான். ஆனா புத்தகமா போடுறது தான் முதல் பிளான். பாக்கலாம்.

 2. Pingback: அன்னை மெஸ் – பாகம் 8 « பிரசன்னா பக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.