அன்னை மெஸ் – பாகம் 3

”நீ அதுல இருக்குற பிரச்சினைய பாக்குற, நான் வாய்ப்ப பாக்குறேன்.” இந்த  மாதிரி வசனம் எங்க வீட்ல கேட்டா, நானும் என் அண்ணனும் மூணாவது மாடில இருந்தா கூட குதிச்சு ஓடிடுவோம்.

கபடிப் போட்டிகள் ஒரு வழியா முடிஞ்சு போச்சு. அதே போல ஒரு நல்ல வருமானமும் நின்னு போச்சு. நல்ல விஷயம் என்னன்னா, எங்க கிட்ட வருஷ சந்தா கட்டின பசங்க எங்க வீட்ல தான் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. அப்போ பாத்து நேட்வெஸ்ட் சீரீஸ். சாம்பியன்ஸ் ட்ராபி எல்லாம் விளையாடி நம்ம இந்தியன் டீம் கொஞ்சம் எங்களை காப்பாத்திட்டு இருந்தாங்க. புதுசாத் திறந்த நியூ அன்னை மெஸ் எல்லாத்துக்கும் இதே கதைதான். ஒரு தெருவ சுத்தி 4 கடை இருந்தா இந்த கதி தான். அதுவும் போக நெல்லைக்கு பெருமை சேர்க்கிற கையேந்தி பவன்ஸ் எங்களுக்கு பெரிய போட்டியா இருந்தாங்க. என்ன தான் அம்மா ஆபீஸ்ல ஆர்டர் கிடைச்சாலும் அதெல்லாம் ரொம்ப நாளைக்கு நம்ப முடியாதுன்னு அப்பா நினைச்சார். அப்போ அப்பா கண்ல பட்ட இடம் தான் என்.ஜி.ஓ காலனி.

எனக்கு அங்க போற ஐடியா சுத்தமா பிடிக்கலை. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். ஒரு ஞாயிறு கடைக்கி லீவ் விட்டுட்டு, அப்பாவும் அம்மாவும் அங்க போய் பாத்தாங்க. என்ன பாத்தாங்க, என்ன பிடிச்சதுன்னு தெரியலை, ஒரு நாள் அங்க கடை போடணும்னு முடிவாயிடுச்சு. நான் முடியாதுன்னு சொன்னதால, அண்ணனை பிடிச்சுகிட்டார் அப்பா. திடீர்னாப்புல அடுத்த நாள் காலைல ஒரு ஆட்டோ வந்திச்சு. ஒரு மடக்குற டேபிள் நாலு சேர், ஒரு குண்டால இட்லி, ஒரு குண்டால பொங்கல், தூக்குசட்டியில சட்னி சாம்பார் எல்லாம் வெச்சு எங்க அண்ணனை அனுப்பியாச்சு. அங்க இருக்குற ஆர்டீஓ ஆபீஸ் வாசல்ல கடை போடப் பிளான்.

அங்க இருந்த ஒரு மரத்துக்கு கீழ கடையப் போட்டு, அண்ணன் உக்காந்திருந்தார். எனக்கு போகப் பிடிக்கலைனு வழக்கம் போல நம்ம நண்பர்கள் கூட உக்காந்து அரட்டை அடிச்சுட்டு இருந்தேன். ஐயப்பா தான் முதல்ல கேட்டார்.

“எலே! பெருமாள்புரம் தாண்டியா கடை போடப் போறீய?”

”ஆமாண்ண! ஏன்?”

“அங்க எனக்கொரு மாமா இருக்கார்”

“சும்மா இருங்க திருநெல்வேலில எங்க போனாலும் உங்களுக்கு ஒரு மாமா, சித்தி வந்திருவாங்க”

“இல்லல! காலைல சாராடக்கர் காலேஜ் போகுற பஸ் ஆர்டீஓ ஆபீஸ் ல இருந்து தான் வருதாம்?”

“அதனால?”

“அந்த பஸ் மகளிர் மட்டும். ஆமா உங்கண்ணன் எப்ப போனான்?”

“ஒரு ஏழு மணி இருக்கும்”

“மணி 3 ஆச்சு, இப்ப காலேஜ் விடுற நேரம். வா போவோம்”னு சொல்லி என்னை சைக்கிள் அழுத்த வெச்சு முன்னாடி உக்காந்துகிட்டார்.

அங்க போனா, எங்கண்ணன் பாவம் வெயில்ல உக்காந்திருக்காப்புல. என்னை பாத்ததும்

“வாலே! அதெப்பிடி மூக்குல வேத்தா மாதிரி கடைய எடுத்து வைக்கும் போது சரியா வர்ற?

”நான் எங்க வந்தேன், இவர் தான் இழுத்துட்டு வந்தார்”

“அதான பாத்தேன்! நல்ல வேளை சைக்கிள்ல வந்த. இரு ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுதேன்” சொல்லிட்டு பக்கத்துல இருந்த ஒரு வீட்டுக்குப் போனார். ஐயப்பா அண்ணன் வர போற பஸ்ல இருக்குற காலேஜ் பிள்ளைகளைப் பாத்து சிரிக்குறதும், கை ஆட்டுறதும்னு அட்டகாசம் பண்ணிட்டு இருந்தார்

”இம்புட்டு சாமானையும் சைக்கிள்ல எடுத்துட்டு போக முடியாது. அவரை ஆட்டோ பிடிக்க சொல்லுங்க” நான் ஐயப்பா கிட்ட சொல்லிட்டு இருந்தேன். ஏற்கனவே அவரைக் கூட்டிட்டு வந்தா இளைப்பு எனக்கு.

“இருலே! நமக்கா வழி இல்ல, இங்க எங்க சித்தி மவன்..”

“அத்தோட நிறுத்தும், இதுக்கு மேல எதுனா பேசினா, இங்கயே விட்டுட்டு போயிடுவேன்.”

அதுக்குள்ள அந்த வீட்டுக்குள்ள இருந்து எங்கண்ணன், புன்னகையோட வந்தார்.

“பிரஸு! அந்தா அந்த வீட்ல பேசிட்டேன்! டேபிள், சேர அங்கண போட்டுட்டு போயிடலாம். பாத்திரம் மட்டும் எடுத்துக்குவோம்”

“இருங்க, எவ்வளவு வெயிட். ஓரு சைக்கிள் தான் இருக்கு. நம்ம ரெண்டு பேரும் இதுல போயிட்டா, ஐயப்பாண்ண எப்படி வருவார்?”

“அண்ணனும் தம்பியும் சேந்து என்ன நட்டாத்துல விடுவியனு எனக்கு தெரியும்டி. நான் பாலாவ வர சொல்லிட்டேன். காலேஜ் தாண்டினு சொன்னதும் புயல் மாதிரி வந்திட்டிருக்கான்” ஐயப்பா சொன்னார். நம்ம பாலாகிட்ட இது ஒரு நல்ல பழக்கம். பத்து கிலோமீட்டர் ஓடி வந்தா கூட தூரத்துல ஒரு துப்பட்டா தெரிஞ்சா மான் மாதிரி துள்ளி குதிச்சு ஓடி வருவான். கிட்டத்தட்ட ஒரு 15 நிமிஷத்துல அவனும் வந்துட்டான்.

பாத்திரம் எல்லாம் எடுக்க ரொம்ப சுலபமா இருந்துச்சு. அப்போ தான் அண்ணன் சொன்னார். இன்னைக்கு நல்ல வியாபாரமாம். போட்ட சரக்கெல்லாம் பன்னிரெண்டு மணிக்கே காலியாம். அடுத்து ஒரு 30 பேர் வந்து கேட்டுப் போனாங்களாம். அப்பாகிட்ட சொன்னா, கண்டிப்பா இங்க ஜாகை மாத்திருவார். ஆனா எனக்கு பாளையங்கோட்டைய விட்டு வரப் பிடிக்கலை. அப்பாகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன். அண்ணனும் கிட்டத்தட்ட அதே தான் சொன்னார். நல்லா வித்தாலும், மாத்தி விட ஆள் இல்லை, ஒரு சில்லறை மாத்தணும்னா ஒரு 40 மீட்டருக்கு ஒரு கடையும் இல்லை. கஷ்டப்படுவோம்னு தான் அவரும் சொன்னார்.

நல்லது, பாளையங்கோட்டையிலயே இருக்கப் போறாம்னு நினைக்கும் போது, அப்பா சொல்லிட்டார், இன்னைக்கு ஒரு நாள்ல ஒண்ணும் முடிவு பண்ண முடியாது. இன்னும் ஒரு வாரம் பாப்போம்னு. எனக்கா கடுப்பு. இருந்தாலும், அப்பா சொல்லை அண்ணன் மீற மாட்டார். அவர் மாத்திவிட ஆள் இல்லாம கஷ்டப்டும்போது எனக்கே கஷ்டமா இருந்தது. சரி போவோம்னு கிளம்பியாச்சு. நான் போனப்பல்லாம் பெருசா கூட்டம் இல்லை. சரியா பன்னிரெண்டு மணிக்கு ஒருத்தன் ஷேர் ஆட்டோல சித்ரான்னம் எடுத்துட்டு வந்தான். நாங்க முதல் நாள் கடை போட்ட அன்னிக்கு அவனுக்கு ஏதோ வயிறு சரியில்லை போல, லீவ். அவன் வந்தப்புறம் எங்க கடைகிட்ட ஒரு பய வரலை. எல்லாம் அங்க தான் போனாங்க. நாங்க என்னவோ அவனுக்கு சில்லறை குடுக்குற வெண்டிங் மெசின் மாதிரி ஆயிட்டோம்.

பிள்ளைங்க ரெண்டும் கஷ்டப்படுதேன்னு சொல்லி ஒரு நாள் காலைல அம்மா எங்களைப் பாக்க வந்தாங்க. அம்மா கூட வேலை பாக்குறவங்க ரெண்டு பேர் இருந்ததால ஒரு ரெண்டு பொங்கல் போச்சு. போகும்போது எங்கண்ணனைப் பாத்து,

“இன்னைக்கு கரண்ட் பில் கட்டணும். என் கூட வா”ன்னாங்க. எனக்கு செம கடுப்பயிடுச்சு. அவருக்கு உதவி பண்ண வந்தா, நம்ம தலைல இதெல்லாம் கட்டுறாங்களேன்னு.

“எல, அவந்தான நெதம் பாக்கான். ஒரு நாள் பாத்தா ஒண்ணும் கருத்துறமாட்ட”

“ஒரு நிமிஷம். நான் ஒரு போன் பண்ணனும். அப்புறம் போங்க”

அவங்களை கடைல உக்கார வெச்சிட்டு, பாலாக்கு போன் போட்டேன்

“எலே! இங்க எதோ கலைவிழாவாம், நிறைய பொண்ணுங்க பார்சல் கேக்குது. நான் பார்சல் கட்டுறேன். நீ காச மட்டும் வாங்கிப் போடு”

பய, என்ன ஏதுன்னு கேக்கவேயில்லலா, அடுத்த நிமிசம் சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சுட்டான் போல.

அவன் வந்தப்புறம் அவன் கூட கதையடிச்சுட்டு, ஒரு மணிக்கெல்லாம், கிளம்பிட்டோம்.

வீட்ல எங்க அண்ணனும் அப்பாவும், ரொம்ப தீவிரமா எதோ விவாதம் பண்ணிகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேர்ல ஒருத்தர் யோசிச்சாலே ஆபத்து. இதுல ரெண்டு பேரும் சேந்தா அவ்வளவு தான். நான் வெளில உக்காந்து பொன்னியின் செல்வன் எடுக்கப் போனேன். அண்ணன் வந்தார்.

”இங்க காலி பண்ணிட்டு, என் ஜி ஓ காலனி போறோம்”

“என்னது?? என்னத்துக்கு?”

“அங்க கடைத் தொறக்கப் போறோம்”

“இன்னைக்கு கொண்டு போனதுல நானும் பாலாவும் தின்னது போக மிச்சம் அப்படியே இருக்கு. அங்க போய் என்னத்த விக்கப் போறோம்?”

“அவன் சித்ரான்னம் தானல விக்கான். நம்ம அங்க ஒரு வீடெடுத்து பெஞ்சு போட்டு அளவு சாப்பாடு போடுவோம்.”

“அதுக்கு இன்னொருத்தன் இருக்காம்லா, கூரைப் போட்டு, சைடுல, பத்தாக்குறைக்கு ஒரு பாய் வேற பிரியாணி போடுதாரு”

“இப்படி பேசினா, பேசிட்டே இருக்க வேண்டியது தான். நம்ம அங்க போறோம். அவ்வளவு தான்”

பாலா வந்தான் “என்னல ஆச்சு உங்க அண்ணனுக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடி உயிர் போனாலும் பாளையங்கோட்டைல தான் போகும்னான். இன்னைக்கு இப்படி பேசுதான்”

குடுமி ஏன் ஆடுச்சுனு எனக்கு அடுத்த வாரம் தான் தெரிஞ்சது.

முந்தைய பாகங்கள்.

பாகம் 1

பாகம் 2

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.