அன்னை மெஸ் – பாகம் 2

திருநெல்வேலில ரெண்டு விஷயம் ரொம்ப பிரபலம். ஒண்ணு, நெல்லையப்பர் கோயில் தேரு. ரெண்டு தசரா. இதைத் தவிர எங்க ஊரு பக்கத்துல நடக்குற கொடை, திருவிழா எல்லாம் போயிட்டு வருவோம்னாலும், இந்த ரெண்டு விஷயம் நடக்கும் போது தான் ஊரே களை கட்டும். அப்படி இருந்த ஊரை ஆப் சீசன்ல களை கட்ட வெச்சது எங்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். தேசிய அளவுல ஹாக்கி, கபடி போட்டிகளை எங்க ஊர்ல நடத்த ஆரம்பிச்சாங்க. அதுல என்ன சுவாரசியம்னா, எல்லா தடவையும் மகளிர் மட்டும் போட்டிகள். ஊர்ல கிரிக்கட்ட தவிர மத்த விஷயம் தெரியாதவன்லாம் திடீர்னாப்புல கபடில புலி ஆகிட்டாங்க.

“நேத்து அந்த பூனாக் காரி ரைடு போனா பாத்தியால? என்னா வேகம்.”

“நீங்க எட்டு மணி மேட்ச் பாக்கலேல்லா, அந்த கேரளாக்காரி ரெண்டு பேரை தூக்கி விசிறிபுட்டால்லா?”

அப்படிங்குற மாதிரி உரையாடல்கள் டீக்கடைல ரொம்ப சாதாரணமாகிப் போச்சு.

ஒரு நாள் வீட்ல இருந்தா காய்கறி வெட்டுற வேலை குடுத்துடுவாங்கனு நண்பர்கள் கூடுற இடத்துக்கு போயிட்டு கதை அடிச்சுட்டு உக்காந்திருந்தேன். பாலா, குமார், ஐயப்பா, விஜய் எல்லாரும் இருந்தாங்க. திடீர்னாப்புல குமார்

“எலே வீட்டுக்கு போயிட்டு ரோஜாகூட்டம் கேசட் எடுத்துட்டு வாயேன்”னான்

மதியம் பன்னிரெண்டு மணி, இப்ப வீட்டுக்கு போனா, எப்படியும் யாராவது சாப்பிட வந்திருப்பாங்க, நம்ம பரிமாறணும்னு பயந்திட்டு “பாலா கொஞ்சம் போயிட்டு வாயேன். அப்படியே எங்க அண்ணன் கேட்டா, என்னப் பாக்கவேயில்லைனு சொல்லிடு”னு சொல்லி அனுப்பிச்சேன். போனவன் அரைமணி நேரமா காணவேயில்லை.

“ஒரு பாட்டு பதியலாம்னு அவனை அனுப்பி வெச்சோம் பாரு. இரு நான் போறேன்” அடுத்து குமார் போனான். மணி ஒண்ணாச்சு அவனையும் காணோம். அடுத்து அய்யப்பா, அடுத்து விஜய்னு எங்க வீட்டுக்கு போன எவனுமே திரும்ப வரலை. என்னமோ ஏதோனு எனக்கு பயம் வந்து வீட்டுக்குப் போனா..

வீட்டு முன்னாடி ஸ்போட்ஸ் ஷூவா கெடக்கு. எல்லா பயலுவோ சைக்கிளும் எங்க வீட்டு முன்னாடி தான் நின்னது. உள்ள போய் பாத்தா கேரளா ஸ்டேட் கபடி டீம் எங்க வீட்ல தான் சாப்பிட வந்திருந்தாங்க. பாலா, தண்ணி எடுத்துகிட்டு இருந்தான், குமார் தேங்காய் துருவிகிட்டு இருந்தான். ஐயப்பா என்ன பண்ணனு தெரியாம, சும்மா அங்க இங்க சுத்திகிட்டு இருந்தார். விஜய், அப்பளம் பொறிச்சிகிட்டு இருந்தான்.

“உன் பிரண்ட்ஸ் எல்லாம் இங்க வந்து கஷ்டப்பட்டுகிட்டு இருங்கானுவோ நீ எங்கல போய் சோவாரப் போன?” அம்மா.

அவனுங்க எதுக்கு இப்படி விழுந்து விழுந்து வேலைப் பாக்காணுவோனு எங்களுக்கு தான தெரியும். வந்த பிள்ளைகளுக்கு சாப்பாடு பிடிச்சதோ இல்லையோ, எங்க வீட்ல வர மலையாள சேனல் பிடிச்சது, அதனால அடுத்த பத்து நாளைக்கும் எங்க வீட்டுலயே சாப்பாடுனு முடிவு பண்ணிட்டாங்க. ஒரு தொகையும் அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாங்க. அப்பா கைல இருந்து தொகைய வாங்கிட்டு காய்கறி, பலசரக்கு எல்லாம் நண்பர்களே வாங்கிட்டு வந்துட்டாங்க. அடுத்த பத்து நாளும் வேலை எங்க வீட்ல தான்னு அவங்களே முடிவு பண்ணிகிட்டானுங்க. கைல மிஞ்சின காசுல அப்பா அர்ஜெண்டா போய் நோட்டீஸ் அடிச்சுட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு சாயங்காலமே கிரவுண்ட்க்கு வர்ற காலேஜ் கோச் எல்லாம் பாத்து கேன்வாஸ் பண்ண பிளான்.

அண்ணனுக்கு ஹிந்தி தெரியும். அதனால அந்த பொறுப்பு அவர் கிட்ட போயிடுச்சு. அதுவும் போக, எங்க வீட்ல சாப்பிட்டு போன பொண்ணுங்க ஸ்போட்ஸ் ஹாஸ்டல்ல சொல்லி, நிறைய பேருக்கு எங்களை ஆல்ரெடி தெரிஞ்சு இருந்தது. அண்ணனுக்கு இந்த விஷயத்துல பக்க பலமா இருந்தது பாலா, எந்த டீம்ல எத்தன பேர் பாக்க நல்லா இருப்பாங்க, யார்கிட்ட எல்லாம் அண்ணன் பேசணும்னு முடிவு பண்ணதெல்லாம் அவந்தான். மத்தபடி வீட்டு வேலை எல்லாம் மத்த பசங்க பாத்துகிட்டாங்க. மேட்ஸ் முடிஞ்சதும் ஒரு பத்து பொண்ணுங்க செவப்பா, எங்க மெஸ்க்கு வந்தா மாதிரி விளம்பரம் ஹிந்து பேப்பர்ல முதல் பக்கம் குடுத்திருந்தா கூட வந்திருக்காது. எங்க தெருவ சுத்தி தங்கியிருந்த ஹாஸ்டல் பசங்க எல்லாம் எங்க கிட்ட வருஷ சந்தா கட்டி சாப்பிட வர ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ எங்க கடைல கேரளா டீம், பூனா டீம், அப்புறம் மகராஷ்டிரா டீம் எல்லாரும் சாப்பிட வர ஆரம்பிச்சாச்சு.

ஐயப்பா அண்ணன் ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டாரு

“எலே, பிள்ளைகள் சாப்பிட வர்ற நேரம், இந்த ஹாஸ்டல் பசங்க வந்தா நமக்கு ஆபத்து. பாக்க வேற நல்லா இருக்காங்க. அதனால, இவங்க சாப்பிடும் போது இடம் இல்லைனு சொல்லிடுங்க.”

அதுல இருந்து எங்க கடைல இருந்து கடைசி பொண்ணு வெளில போற வரைக்கும், எந்தப் பையனையும் உள்ள விடாம் குமார் (போலீஸ் டிரைனிங்) பாத்துகிட்டான். ஒவ்வொரு மாநிலத்த சேந்தவங்க ஒவ்வொரு மாதிரி இருந்தாங்க. பாக்க வித்தியாசமா இருக்கும். கேரளா டீம் எல்லார் விளையாண்டதையும் பத்தி பேசிட்டே சாப்பிடுவாங்க. கடைசில அவங்க அரை இறுதிக்கு தகுதி பெறாம போனப்ப எங்க கடைல வெச்சு தான் மூணு பேர் ரெண்டு மணி நேரம் அழுதாங்க. பூனா டீம் ஜாலி டீம், சிரிக்குற சிரிப்புல வீட்டு கூரை எல்லாம் இடிஞ்சு விழுந்திடுமோனு எங்களுக்கெல்லாம் பயமா போச்சு.  மகாராஷ்டிரா டீம், அம்மா சப்பாத்தி போட கொஞ்சம் நேரமாச்சுன்னா கொஞ்சம் கூட யோசிக்காம, அவங்களே மாவு பிசைஞ்சு போட்டு சாப்பிட்டுட்டு காசும் குடுத்துட்டு போயிடுவாங்க. நல்லா பழகவும் செஞ்சிட்டாங்க. இன்னும் அஞ்சு நாள் தான்னு நினைக்கும் போது எங்களுக்கே கஷ்டமா இருந்தது.

நடுவுல என்னாச்சுன்னா, மத்த கடைக் காரங்களுக்கு நாங்க கல்லா கட்டுறத பாத்து செம பொறாமை ஆகிப் போச்சு. பாவம் அவங்களும் எங்க கடைக்கு வழி கேட்டவங்க கிட்ட, அவங்களுக்கு தெரிஞ்ச  ஹிந்தில எல்லாம் பேசிப் பாத்தாங்க, ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அங்க வந்தவங்க எல்லாருக்கும் அன்னை மெஸ்சும் அதன் அதி தீவிர் உழைப்பாளிகளையும் ஏற்கனவே தெரிஞ்சிருந்தது. அதனால எங்க ஏரியால மட்டும் “நியூ அன்னை மெஸ்” “ஒரிஜினல் அன்னை மெஸ்” “ஒன்லி அன்னை மெஸ்”னு பல கடைகள் வர ஆரம்பிச்சது. ஆனா அவங்களுக்கு நேரம் ரொம்ப கம்மி. அதனால பேனர் வைக்க போட்ட காசைக் கூட எடுக்க முடியல.  கிளம்பும் போது பூனா டீம் கன்னியாகுமரி எல்லாம் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுக் கேட்டதால, நம்ம நண்பர்கள் பட்டாளம் வேன் அமத்தி எல்லாரையும் கூட்டிட்டு போய் சுத்திக் காமிச்சிட்டு வந்தாங்க.

அந்த பத்து நாளும் பயங்கர வேலையும் கூத்துமா இருந்தாலும், ஒரு சின்ன சந்துக்குள்ள இருந்த எங்களை ஊருக்கே அடையாளம் காட்டினது அந்த கபடிப் போட்டி தான். இப்ப வந்தவங்க போயிட்டாங்க. ஆனா அவங்களால எங்களுக்கு வருஷ சந்தால சாப்பிட ஒரு 20 பேர் கிடைச்சுட்டாங்க.

அடுத்த பாகம்.. அடுத்த வாரம்.

முதல் பாகம்

Comments

  1. Pingback: அன்னை மெஸ் – பாகம் 3 « பிரசன்னா பக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.