நாங்களும் எப் எம்-ம்

கார்ல ஏறின உடனே நான் சொல்ற முதல் வார்த்தை..”அந்த எப் எம்ம அமத்திட்டு பாட்டுப் போடுப்பா”ங்குறது தான். கார் சாரதி வினு நம்மூர்க்காரப் பையன் தான். “சார்வாளுக்கு எப் எம் மேல அப்படி என்னதான் கோவமோ? சும்மா வந்தாலும் வருவாரு. எப் எம் கேக்க மாட்டார்”னு அலுத்துக்குவான். உண்மை தான். எப்பமோ எப் எம் மேல இருக்குற மோகம் போயிருச்சு.

திருநெல்வேலி நம்ம ஊர். சினிமாவும் சாப்பாடும் தான் நமக்கு மூச்சு. இருவது வயசு வரைக்கும் அப்படித்தான். வெளில போனா ஒண்ணு தின்னுட்டு வருவோம் இல்லை படம் பாத்திட்டு வருவோம். அதனால சினிமாவையும் எங்களையும் பிரிக்க முடியாது. சினிமா பாட்டையும் தான். எங்க வீட்ல ஒரு டூ இன் ஒன் இருந்தது. நான் ரெண்டாப்பு படிக்கையில எங்கப்பா புதுப் பையன் பாட்டு போட்ருக்கான்னு ஒரு கேசட் வாங்கிட்டு வந்தார். ரெண்டு மூணு நாள் விடாம அந்த படப் பாட்டு தான் ஓடிகிட்டு இருந்தது. பக்கத்து தெரு பசங்க எல்லாம் வந்து வாசல்ல நின்னு கேட்டுப் போனானுங்க. அந்தப் படம் ரோஜா.

நாலாப்பு படிக்கையில, எங்கப்ப பெரிய ஸ்பீக்கர் ரெண்டு வெச்சு பிலிப்ஸ் பவர் ஹவுஸ் ஒண்ணு வாங்கிக் குடுத்தார். என் பொறந்தநாளைக்கு குடுத்த காசுல குளிக்க நின்ன துண்டோட கடைக்குப் போய் இந்தியன் படப் பாட்டு வாங்கிட்டு வந்தேன். தெற்கு பஜார்ல. ஒரு வாரத்துக்கு தெருவே அலறிச்சு. காலைல பாட்டு கேட்டு தான் எழுந்திருப்போம். அப்பா வீட்ல இருந்தா பாட்டுக் கேட்டு தான் தூங்குவோம். பழைய இந்திப் பாட்டெல்லாம் தலைகீழ் பாடமா மாடுறத இப்ப பாக்குறவங்க ஆச்சரியமா பாப்பாங்க. ஆனா அதுக்கெல்லம் எங்கப்பா வாங்கிட்டு வந்த எச் எம் வீ தான் காரணம்.

அப்போல்லாம், 1997 தான் சொல்லுதேன், திருநெல்வேலி ஜங்ஷன் ல இறங்கினாலே திடும் திடும்னு அலர்ற காபி கடைங்க தான் கண்ல படும். யார் கடைல பெரிய ஸ்பீக்கர் இருக்கோ, புது பாட்டு போடுதாவளோ அங்க தான் கூட்டம் நிக்கும். அங்க நின்னு பாட்டக் கேட்டுத் தான் ஒரு படம் எங்கூர்ல ஹிட்டா போச்சான்னே முடிவாகும். பக்கத்துலயே பெரிய கேசட் கடை இருக்கும். என்ன பாட்டு வேணும்னாலும் சலிக்காம எடுத்து தருவார் அந்தண்ணன். அங்க தான் பாட்டு பதியக் குடுப்போம். ரெண்டு நாள் காத்திருக்கணும். ஆனா பரவாயில்லை. என்ன பாட்டு வேணும்னு எழுத ரெண்டு வாரம்ல ஆயிருக்கும்.

ஸ்கூல்ல டான்ஸ் போட்டி வந்தா தான் அந்த அண்ணன் பாடு திண்டாட்டம். அங்க நிப்பாட்டி இந்தப் பாட்ட போட்டு, இங்க நிப்பாட்டி அந்தப் பாட்டப் போட்டு, ரொம்ப சிரமப்படுவார். ஆனா திருப்தியா வந்தா எங்க கிட்ட குடுக்கும் போது அவர் முகம் இருக்கும் பாருங்க களையா.. ரசிச்சு செஞ்சார் போல அந்த வேலைய.

எங்க அண்ணன் ஒரு தடவை ஏதோ ஒரு பாட்டை பஸ்ல கேட்டு வந்து ஒரு கேசட் கடைல இருக்க அவ்ளோ புதுப் பாட்டு கேசட்டையும் கேட்டு படத்த கண்டுபிடிச்சு வாங்கிட்டு வந்தப் படம், முதல்வன். வெளியூர்ல இருந்து வந்த எங்க அத்தை மவன் எதையாவது வாங்கி குடுத்துட்டு தான் போவேன்னு சொல்லவும், கேட்டு வாங்கினது உயிரே பாட்டு. எங்களுக்கு முன்னாடி இருந்த தலைமுறை எப்படி இளையராஜாவை கொண்டாடிச்சோ, நாங்க ரஹ்மானைக் கொண்டாடினோம். நடுவுல ரொம்பத் தொல்லைப் பண்ணி இந்திப் பாட்டெல்லாம் கேட்டு வாங்குவோம்.

இப்படி எங்க தேடலுகெல்லாம் எமனா வந்தது தான் இந்த எப் எம். போன தடவை போனப்ப நாங்க பதிவா கேசட் கடை இருக்குற எடத்துல எது எடுத்தாலும் முப்பது ரூவா கடை இருந்தது. அந்தண்ணன் தான் இருந்தார் ஆனா அவர் முகத்துல பழைய களை இல்லை. நாம கேக்கலனாலும் காதுக்குள்ள பாடுற எப் எம் எங்க? முக்கால் மணி நேரம் சைக்கிள் அழுத்தி நண்பன் வீட்டுல உக்கார வெச்சு நம்மளக் கேக்க வெச்ச பாட்டுங்க எங்க?

சேசே எனக்கு எப் எம் பிடிக்காதுங்க.

10 Comments

 1. தேவதைத்தோழன்..! January 10, 2012 at 5:36 pm

  Though i have not had any such experience being in Chennai all these years of my life, but you made me travel a little through Nellai of your times and the musical journey which you guys had.
  Really a very nice and soothing post, i hope the impact of this would remain in me for a lengthy while.
  You might find the above comment as too much, but those are the comments stemmed out of true emotions.
  Feeling so lite… Love you so much bro.

  Reply
 2. Pingback: Reminiscing Childhood…. « Prasanna's Ramblings

 3. Viji May 1, 2012 at 5:17 am

  அழகான அழுத்தமான பதிவு. எங்க வீட்டுப் பக்கத்துல “வெல் டன்” னு ஒரு ஆடியோ கடை இருந்துது, நானும் என் தம்பியும் அங்க குடுத்த பாட்டு லிஸ்ட்க்கு அளவே இல்ல. கடைசியா நான் ரெகார்ட் பண்ண குடுத்த பிலிம் டூயட். அதுக்கப்பறம் கல்யாணம் ஆகி, என் பையன் பொறந்து பிக் ஸ்ட்ரீட் போனேன். அந்த கடை இருந்த தடயமே இல்ல. என்ன செய்ய… காலம் மாறியாச்சு ஒத்துண்டு தான் ஆகணும்.

  ஒரு நிமிஷத்துல இருபது இருபத்தியஞ்சு வருஷம் முன்னாடி கொண்டு போயிட்ட பாரு அது தான் ஒரு நல்ல எழுத்தாளனோட இயல்பு. உன்னோட தமிழ் ப்ளாக், சூப்பர்… தொடர்ந்து எழுது… 🙂

  Reply
 4. --- :) ---- May 1, 2012 at 7:11 am

  கடைசியா பதிஞ்ச படம் டூயட்டா?? நாங்க சேது.. அப்புறம் அண்ணன் மார்க்கெடிங் போக ஆரம்பிச்சப்போ கம்பெனி கேசட் வாங்கிட்டு வர ஆரம்பிச்சுட்டார். கடைசியா வாங்கின ஆடியோ கேசட் உன்னாலே உன்னாலே.. அதுக்கப்புறம் எம்பி3, டவுன்லோடு தான்..

  Reply
 5. Dr.Rajanna August 17, 2012 at 3:01 pm

  இன்னைக்கும் மறக்க முடியாத நினைவாய் இருப்பது, டேப் ரிகார்டரும் கேசட்டும். ஒரு 90 கேசட் வாங்கி அதுல ரெண்டு பக்கமும் சேத்து எத்தன பாட்டு வருமுன்னு எண்ணி, பாட்ட லிஸ்ட் போட்டு, கடைல கொண்டு போய் குடுத்து, 3 நாளைக்கு அப்பறம் மறுபடி அத கடைல போய் வாங்கி, வீட்டுக்கு விறுவிறுன்னு வந்து டேப்புல அத போட்டு கேக்குறப்போ வர்ற சுகம் – மறக்க முடியுமா?

  பாட்டு கேசட்ட எல்லாம் பத்திரமா வச்சு, அத நண்பர்கள்கூட பகிர்ந்து, அவங்க தேய தேய கேட்ட கேசட்ட மறுபடி வாங்கி பத்தரமா உள்ள ஒளிச்சு வப்போமே. இப்போ என்னத்த கேக்க? எத வைக்க? 🙂

  Reply
 6. ranjani135 October 4, 2012 at 5:28 am

  உங்களைப்போலத்தான் எனக்கும் எப்.எம். பிடிக்காது. நீங்கள் சொன்ன காரணங்கள் தவிர, நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசும் வேகம், துளிக்கூட ரசனையே இல்லாத ‘சப்’பென்ற பேச்சுக்கள்…..சலிப்பு தட்டுகிறது!

  Reply
 7. ranjani135 October 11, 2012 at 9:21 am

  அன்புள்ள திரு ப்ரசன்னா,

  உங்களது இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

  இணைப்பு:http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
  வருகை தருக!

  நன்றி!

  Reply
  1. --- :) ---- October 11, 2012 at 2:40 pm

   Thanks mam!

   Reply
 8. Cheena ( சீனா ) October 12, 2012 at 7:56 pm

  அன்பின் பிரசன்னா – நல்லதொரு பதிவு – மலரும் நினைவுகளாக – ஆடியோ கேசட் களையும் ரெகார்டரினையும் நினைவு படுத்திய பதிவு – 1980 -1985 ஆடீயோ கேசட் கேட்டுக் கேட்டு – பதிந்து பதிந்து – எத்தனை எத்தனை கேசட்கள் – அவை எல்லாம் எங்கே இப்பொழுது …….. அருமையான் பதிவு – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  Reply
  1. --- :) ---- October 12, 2012 at 8:00 pm

   உண்மை. எங்க வீட்ல இப்போ டேப் ரெக்கார்டர் கூட இல்ல. இளையராஜா பாடல்கள் நமக்கு ஏன் பிடிக்கும்னா, ஒவ்வொரு பாட்டுக்காகவும் நாமளும் உழைக்க வேண்டி இருந்தது. இப்ப வர்ற பாட்டுங்க கூட அந்த எமோஷனல் அட்டாச்மென்ட் மிஸ்ஸிங்

   Reply

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.