உறக்கமில்லா இரவுகள்

”எப்படி உணர்ற??”

”ரொம்ப சந்தோஷமா!! இப்ப போன் கிட்ட தேவுடு காக்க தேவை இல்லை. எந்த பொண்ணுகிட்ட வேணும்னாலும் பேசலாம். பசங்க கூட சந்தோஷமா சரக்கடிக்கலாம். சுதந்திரமா இருக்கேன்.”

”அவ இருந்திருந்தா, உன்னால இதெல்லாம் பண்ணியிருக்க முடியாதா?”

”ஏன்? முடியுமே. ஆனா ஒப்பாரி வைப்பா. கடுப்பா இருக்கும். மணிக்கு ஒரு முறை நான் பொறுப்பா இருக்கணும்னு நியாபகபடுத்திட்டே இருப்பா. ”

”இப்ப கடுப்பாவே இல்லை?”

”இல்லை. இது வேற மாதிரி. நம்மளை நம்பி யாரும் இல்லை. நம்ம யாருக்கு பதில் சொல்ல வேண்டாம் அப்படினு நினைக்கவே சந்தோஷமா இருக்கு.”

”எனக்கு உன்னை பத்தி சிரிக்குறதா அழுவுறதானு தெரியலை. இவ்வளவு பேசுற நீ அவ போனப்போ ஏன் விழுந்து விழுந்து அழுத??”

”அது வந்து… ”

”சொல்லு.”

“என்னவோ தெரியலை. நம்ம மேல ரொம்ப பாசம் வெச்சிருந்த ஒரு ஆள் நம்ம வாழ்க்கைல இருந்து போறாளேனு ஒரு வருத்தம். ”

”ரொம்ப பாசம்னா எப்படி?”

”இப்ப சிக்கம் பப்ஸ் ஆர்டர் பண்ணோம்னு வைங்க, அவ கிட்ட இருக்குற சிக்கனையும் எனக்கே குடுத்துடுவா. ஒரே ஒரு பீஸ் டெய்ரி மில்க் இருக்கும் போது நான் கேக்காமலே என் வாய்ல போட்ருவா. அந்த மாதிரி.”

”அவ்வளவு தான் நீ சொல்ற பாசமா?”

”எனக்கு சொல்லத் தெரியலை. ஆமா எதுக்கு இப்ப இந்த நேரத்துல பழசெல்லாம்?”

”நீ இப்ப ரொம்ப மாறிட்ட. அதான் கொஞ்சம் பேசலாம்னு தோணுச்சு.”

”நீ சொல்றதும் சரிதான். நிறைய மாறிடுச்சி. முன்னால அழகா தெரிஞ்ச எதுவும் இப்ப பாக்கப் பிடிக்கலை. முன்னாடி பிடிக்காத விஷயத்த இப்ப செய்யுறேன்.”

”பிடிச்சு செய்யுறியா?”

”அப்படி சொல்ல முடியாது. எதுலயும் பிடிப்பில்லை. என்ன பண்றதுன்னு தெரியலை. அதான் இப்படி ராத்திரி மூணு மணிக்கு உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.”

”கஷ்டமாயிருக்கா?”

”ஹிஹி.. யாருமே துயரத்துல தனியா இருக்குறதில்லை. என்னை மாதிரி இதே நேரத்துல என்னை விட கஷ்டப்படுறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அதனால நான் மட்டும் தனியா கஷ்டப்படுறேன்னு தோணலை.”

”தத்துவமெல்லாம் பேசுற? நீ காமெடி பண்ணாதான எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கும்.”

”எல்லாருக்கும் என்னை பிடிக்கிறதை விட, எனக்கு என்னைப் பிடிக்கணுமே. பிடிக்க மாட்டேங்குது.”

”ஏன் உன் மேல உனக்கு நம்பிக்கை போச்சு?”

”அது அப்படித் தான் பாஸ். ஒரு பொண்ணு உங்க கூட இருக்கும்போது உலகமே உங்க காலடில இருக்குற மாதிரி இருக்கும். எதையும் சாதிச்சுடலாம்னு தோணும். நம்ம ஒரு சின்ன ஓடைய தாண்டுனா கூட கைதட்டி உற்சாகப் படுத்த ஒரு உயிர் இருக்கும். அது இல்லைனு ஆகும் போது எல்லாம் போன மாதிரி ஆயிடும்.”

”ஆனா.”

”புரியுது.. மனுஷன் நம்பணும்னு நினைக்குறதை மட்டும் தான் நம்புவான். நம்ம நம்பிக்கை தான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மாறுமே.”

——————————————————————————————

”இன்னும் தூங்கலையா?? நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம்?” அம்மா எழுந்துட்டாங்க. நான் கண்ணாடிய வெச்சிட்டு படுக்கப் போறேன். இன்னுமோர் உறக்கமில்லா இரவு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.