பெண்ணாசை பொல்லாதது. பாகம் 4.

நாங்க எங்க செட்ல 5 பேருங்க. நான், எங்க அண்ணன், பாலா, ஐயப்பன், குமார். இதுல இப்போ குமார் போலீஸ் வேலைல இருக்காப்ல. செட்ல முதல்ல பைக் வாங்கினது எங்க அண்ணன் தான். அதனால அவர் பைக் தான் பொதுவானதா இருந்தது. தேவையானப்போ பெட்ரோல் போட்டு யார் வேனும்னாலும் எடுத்துட்டு போயிட்டு வருவம்.
அப்போ தான் ஒரு விஷயமா என்.ஜி.ஓ காலனி போயிருக்கும் போது, நானும் ஐயப்பா அண்ணனும் ஒரு பொண்ண பார்த்தோம், அது என்னடான்ன சரியான லுக். நம்ம ஐயப்பா அண்ணன் இருக்கார்ல அவர் ஸ்டைலே தனி. ரோட்ல ஒரு பொண்ணு தல நிமிந்துறக் கூடாது.ஸ்டைலா காலர தூக்கி விட்டு “தொல்லை தாங்க முடியலப்பா, இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி முறைச்சு முறைச்சு பார்க்குதுங்க”. அண்ணன் அது கழுத்து வலிக்குதுனு சொல்லி கழுத்த திருப்பி இருக்குனு சொன்னாலும் “அது எப்படி நான் இருக்குற பக்கம் திரும்பலாம்?” அப்படின்னு கேக்குற ஆளு. அப்படிபட்ட ஒரு ஆள இந்த பொண்ணு லுக் விட்டு போயிடுச்சு. நான் ஒருத்தன் நிக்குறேன்னு எண்ணமே இல்லாம வண்டியத் திருப்பி கிட்டு அந்த பொண்ணு பின்னாடி போய்ட்டார்.
போய்ட்டு வந்து “டேய் தம்பி! அண்ணனுக்கு பிக் அப் ஆகிடுச்சுடா!” அப்படின்னார். எனக்கு இன்னும் புரியல எப்படி ஐயப்பா அண்ணனுக்கு மட்டும் எல்லா பொண்ணும் விழுது. சரி விடுங்கப்பா அப்படின்னு வந்தாச்சு. இந்த மேட்டர பாளையங்கோட்டை வந்த உடனே போஸ்டர் அடிக்காத குறையா எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. பாலாவுக்கு பொசுங்கல் தாங்கல.
அடுத்து ஒரு வாரம் கழிச்சு, நானும் பாலாவும் படத்துக்கு போகலாம்னு வண்டி எடுத்துட்டு போனோம். அப்ப இதே மாதிரி தான் ஆனா கொஞ்சம் பெரிய பொண்ணு சைக்கிள்ல அதே மாதிரி பாத்துகிட்டே போச்சு.
“நிறுத்து! நிறுத்து வண்டிய நிறுத்து!” பால கத்துனான்.
என்னவோ ஏதோ அப்படின்னு வண்டிய நிப்பாட்டுனா, “அங்க ஒரு பொண்ணு நம்மள பார்த்துகிட்டே போச்சு. என்னானு போய் விசாரிக்கலாமா?”
“எது? நம்மளயா? அது எப்படி?”
“அப்படி இல்லா, நீ வண்டி ஓட்டுன, உன் முகம் அவளுக்கு தெரிஞ்சிருக்க வாய்பில்லை. ஆனா அவ திரும்பி பார்த்துகிட்டே போனா, அதுக்காக அவ என்னதான் பார்த்தானு நான் சொல்ல வரல!”
“நிறுத்து, அந்த பொண்ணுகிட்ட போய் இப்ப என்ன பேசப் போற?”
“ஐயப்பனுக்கு ஒரு உமா கிடைச்ச மாதிரி நமக்கு ஒரு ரமா கிடைக்க மாட்டாளா?”
“இப்பவே சொல்லிட்டேன்! நீதான் பேசணும் எனக்கு அந்த பொண்ணுகிட்ட ஒண்ணும் கிடையாது”
“நீ அவள நிப்பாட்டு மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்.”
அவன் பேச்ச நான் நம்புவனா! எல்லாம் விதி.
எங்க போறான்னு பாத்து, அவள போய் நிப்பாட்டினேன். பயங்கரமா திரு திருனு முழிச்சா.
பாலா பின்னால இருந்து ஸ்டைலா இறங்கினான், என்னதான் பேசப் போறான் அப்படின்னு நான் பார்க்குறப்பவே, என்ன பாத்து “மாப்ளே! ஏதோ சொல்லணும்னு சொன்னியே சொல்லிடு”
“அட சுந்தர பாண்டியா கவுத்துட்டியே”னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, பழைய்ய்ய்ய்ய்ய்ய டெக்னிக் ஒண்ணு யூஸ் பண்ணேன்.
“நீங்க பூர்ணிமா தான?”
“இல்ல என் பேர் சிவசங்கரி”
ஆகா இந்த பொண்ணு பிரச்சினை பண்ணாதுனு ஒரு நம்பிக்கை வந்தது. அப்புறம் அவ எங்க படிக்குறா என்ன ஏதுன்னு கேட்டு வெச்சிகிட்டோம். பிரபலமான கல்லூரி என்பதால் பேர் குறிப்பிடவில்லை. “நான் தினமும் இந்த வழியா தான் கம்ப்யூட்டர் கிளாஸ் போவேன்” அப்படின்னு ஒரு கூடுதல் தகவல் வேற.
“சரி! கிளம்புறோம்” அப்படின்னு கிளம்பினா, “வெரி நைஸ் மீட்டிங் யூ” அப்படின்னு கை குடுத்தா. அதுவரைக்கும் சீன்லயே வராத நம்ம பாலா பாய்ஞ்சு கைய பிடிச்சுட்டான். அன்னைக்கு அவன் போட்ட ஆட்டம் இருக்கே, தாங்க முடியலடா.
இதுல ஒரு மேட்டர் சொல்லியாகணும். சும்மா சுடிதார் போட்டு ஒரு பொம்மைய நிக்க வெச்சா கூட நான் விடமாட்டேன். ஆனா ஏன்னே தெரியல அந்த பொண்ணும் மேல எனக்கு ஒண்ணும் தோணல.
அடுத்த நாளைக்கு கரெக்டா அவ கம்ப்யூட்டர் கிளாஸ் போறேன்னு சொன்ன நேரத்துக்கு நம்ம பய ஆஜர். அந்த பொண்ணும் கிராஸ் பண்ணி போச்சு. ஆனா நம்ம பயல கண்டுக்கல.. அவ்வளவு தான்.
ஒரு அரைமணி நேரம் கழிச்சு நான் போனேன். சபைல* நின்னுகிட்டு இருந்தான். என்னடா அந்தப் பொண்ண பாத்தியான்னு தான் கேட்டேன்.
“சும்மா இரு மாப்ளே! அந்த பொண்ணு ஒண்ணும் நல்ல பொண்ணு மாதிரி தெரியல,எல்லாவன் கிட்டயும் பேசுது, சிரிக்குது எனக்கு அது வேண்டாம். நீ வேணும்னா போ.”
“எது? டேய் சும்மா இருந்தவன வண்டிய திருப்ப சொல்லி, இப்ப இப்படி பேசுறியா? அங்க அப்படியே நிப்பாட்டிக்க, இனிமே ஃபாலோ பண்ணு அப்படி இப்படினு எதுனா பேசுன, உங்கய்யா கிட்ட சொல்லிடுவேன்”
இது எல்லாத்தையும் அன்னைக்கு சபைக்கு புதுசா வந்து இருந்த ஒரு பையன் கேட்டுகிட்டு இருந்தான். அவன் பேரு மணி.கராத்தே பிளாக் பெல்ட்.
“பாஸு”
“என்ன?”
“எனக்கு அந்த பிள்ளைய காமிக்கியளா?”
இவன் பொதுவா இப்படி பேசுற ஆள் கிடையாது. அதாவது நல்ல பையன்னு நினைக்க வேண்டாம், தைரியம் பத்தாது. அதனால நான் முன்னாடியே சொல்லிட்டேன். தூரத்துல இருந்து தான் காமிப்பேன், அப்படியே போய் பிக் அப் பண்ணிக்கணும். சரியா?
எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, கரெக்டா நூற்றாண்டு மண்டபம் முன்னாடி நின்னுகிட்டான். பய வரட்டும்னு நானும் இருட்டுல காத்து கிடந்தேன்.
அந்த பொண்ணும் சைக்கிள்ல வந்தா. தைரியமா கை காட்டி நிப்பாட்டிட்டான்.
“பேஷ்! பாலாவுக்கு இவன் பரவாயில்லை”
அடுத்து அவன் வெச்சான் பாருங்க அணுகுண்டு,
“என் நண்பன் உன்கிட்ட பேச ஆசை படுறாப்ல, அங்க நிக்குறான் பாருங்க”
இதுக்கு அவனே பரவாயில்லையேடா..
அந்த பொண்ண சொல்லியும் தப்பில்லை, ரெண்டாவது வாட்டி நான் வழியுறேன், “நீங்க பேசணும்னா நீங்களே நிக்க சொல்லலாமே, யாரோன்னு நினைச்சு போயிருப்பேன், உங்க வண்டிய பாத்து தான் நின்னேன்.”
“அடிப் பாதகத்தி!!” மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.
“இல்ல சும்மாத்தான், ஆங், இது என் நண்பன் மணி.” இவன கோத்து விட்டு நம்ம தப்பிச்சுகலாம்னு பார்த்தேன்
அவன் ஒரு பெரிய ஜென்டில் மேன் ரேஞ்சுக்கு தலைய லைட்டா ஒருதரம் ஆட்டிட்டு வேற பக்கம் திரும்பிகிட்டான்.
சம்பந்தமில்லாம ஏதோ பேசிட்டு, அவள அனுப்பிட்டு இவன்கிட்ட வந்தேன்.
“ஸாரி பாஸ்! பிள்ள பக்கத்துல வந்த உடனே என்ன பண்ணனு தெரியாம பதட்டத்துல இப்படி பண்ணிட்டேன்.”
“என்னவோ! இனி என்ன இதுல இழுக்காத”
“அப்படி சொல்லாதீங்க, நான் அந்த பிள்ளைய சீரியஸா லவ் பண்றேன்.”
“எது? இது எப்பலேர்ந்து?”
“இப்பத்தான்! பாத்த உடனே பிடிச்சு போச்சு”
அதெப்பிடிடா உங்களுக்கு மட்டும்.. சரி விடு.
“நான் என்ன பண்ணனும் அதுக்கு.?”
“ஒண்ணும் பண்ண வேண்டாம் தலைவா. என் கூட வந்தால் போதும்.”
“என் வரலாறு எல்லாம் தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட!” (இன்னொரு பதிவு)
“என்னவோ விடுங்க நாளைக்கு சாயங்காலம் ஒரு 5.30க்கு சபைக்கு வந்திடுங்க பேசிக்கலாம்”
அடுத்த நாள் நான் வேணும்னே லேட்டா போனேன். அங்க பாத்தா நம்ம பாலா, மணி எல்லாம் உக்காந்திருந்தாங்க. அதுல நம்ம மணிக்கு காது கீதெல்லாம் கிழிஞ்சு ரத்தம். எங்கயோ வண்டில விழுந்திருப்பான்
“வாடா, எங்க போன! உன்னால பாரு பல்லி கில்லெல்லாம் உடைஞ்சிருக்கு!”
“நிறுத்து, இவன் வண்டில விழுந்ததுக்கெல்லாம் நான் எப்படி பொறுப்பு?”
“வண்டில விழுந்தானா, ஹிஹி, சிவசங்கரி ஆள போட்டு அடிச்சிட்டு வந்திருக்கான்.”
“என்னது அவளுக்கு ஆள் இருக்கா?”
“நான் தான் சொன்னேன்ல மாப்ளே, அவ எவனப் பாத்தாலும் இளிக்கா, “
“மேல ஒண்ணும் பேசாத, தெரியாதவங்கள பத்தி பேசுறது தப்பு, அதிலயும் பொட்ட பிள்ளைகள பத்து நம்ம ஊர்ல பேசுறது ரொம்ப தப்பு.”
இப்ப தான் மணி வந்தான்.
“ஸாரி பாஸ்”
“பரவாயில்ல, என்ன ஆச்சு?”
“நீங்க வர லேட்டாயிட்டா, அதான் நான் அப்படியே நடந்து போகலாம்னு போனேன். நேத்து நாம அந்த பொண்ணு கூட பேசின எடத்துல இன்னொருத்தன் நின்னு பேசிகிட்டு இருந்தான். அதான் எனக்கு கோவம் வந்திட்டு அடிச்சுபுட்டேன்.”
கொஞ்ச நேரம் நிறுத்திட்டு, “சாரி பாஸ்”னான் மறுபடி.
“இது எதுக்கு?”
“இல்ல அவன அடிச்சு முடிச்சப்புறம், டேய் உன்ன யார் அனுப்புனான்னு எனக்கு தெரியும், அவன்கிட்ட போய் சொல்லி அவன் என்ன கலரா இருந்தாலும், அழகா இருந்தாலும் அவன்கிட்ட வரமாட்டேன்னு அப்படின்னு அந்த பொண்ணு சொல்லிச்சு”
“என்னடா சொல்ற”
“இன்னொரு விஷயம்”
“இன்னொண்ணா?”
“அந்த அடிபட்ட பய, புதுப்பேட்டை தெரு. பாத்து இருந்துக்குங்க, நான் வரேன்.”
“டேய் அந்த பொண்ண லவ் பண்றேன்னு சொன்ன நேத்திக்கு”
“அந்த பொண்ணு தான் இன்னொருத்தன லவ் பண்ணுதே, நாம ஒரு லவ் பேர்ட்ஸ பிரிக்க கூடாது.”
இவன் என் வாழ்க்கைல மட்டும் விளையாடலாமா? என்ன கொடுமை இது. புதுப்பேட்டை தெரு மோசமான தெருவாச்சே. செட் சேந்தா கும்மி எடுத்துருவாங்களே. இவனுக்கு போய் நான் உதவி பண்ணுவனா? இன்னைக்கு வரைக்கும் அந்த மரண பயத்துலயே வாழ்ந்துகிட்டு இருக்கேன். அதனால தான் சொல்றேன், உங்க பெண்ணாசை மட்டும் இல்லை, உங்கள சுத்தி இருக்குறவன் பெண்ணாசையும் பொல்லாதது..
—————–
சபை- இது நாங்க எல்லாம் கூடுற எடம். பெருசா சரித்திரமெல்லாம் இல்லை. நேர் மாடில ஒரு டியூஷன் உண்டு. அதுல ஒரு 3 பொண்ணுங்கள ரூட் விட்டோம். அதுகல மிஸ் பண்ணக் கூடாதேன்னு அங்க நின்னு நின்னு அது கூடுமிடம் ஆகிப் போச்சு. திருநெல்வேலி காரங்களுக்கு தெரியும். தெற்கு பஜார் சரஸ்வது ஸ்டோருக்கு எதுத்தால நிப்பம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.