மழை பெய்து கொண்டிருந்தது.
பேருந்துக் கண்ணாடியில் வழிந்த நீரில் விளையாடியபடி
உன்னிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.
“மழைல நனையுறியா?” எனக் கேட்டாய். இல்லையென்றேன்.
“போன் பத்திரம். நம்ம பேசுறதுக்கு அது ரொம்ப முக்கியம்” என்றாய்.
உனக்காக ஒரு இருக்கைத் தள்ளி உக்கார்ந்தேன் என சொல்லியிருக்கலாம்
நான் சொல்லவில்லை
மழை பெய்து கொண்டிருந்தது.
தேநீர் கடையில் தஞ்சம் புக நீ ஓடினாய்
உன்னுடன் நான் ஓடினேன்.
மழைல நனையாம உன்னால இருக்க முடியாதே.
போனை என்கிட்ட குடுத்திட்டுக் கொஞ்சம் நனைஞ்சுட்டு வா
வேண்டாம் என்று தலையசைத்தேன்.
உன் கேசத்தில் இருந்து சிதறிய சிறு நீர்த் திவலைகளின்
மழையில் வேண்டுமானால் நனையலாம் என்று இருந்தது
நான் சொல்லவில்லை.
மழை பெய்து கொண்டிருந்தது
”மொபைல் போன் வாங்கினதுல இருந்து
மழைல நனைய உன்னாலமுடியலைல”
நீ கேட்டாய்.
”மொபைல் வாங்கினதுல இருந்து இல்ல,
உன்கிட்ட பேச ஆரம்பிச்சதுல இருந்து”
என சொல்லியிருக்கலாம்
நான் சொல்லவில்லை.
மழை பெய்து கொண்டிருந்தது
உன்னிடம் பேச வேண்டுமென்று காலையிலிருந்து
பல வழிகளில் கெஞ்சி உன்னை வர வைத்தேன்.
போனைப் பற்றிக் கவலையில்லாமல்
நனைந்து கொண்டிருந்தேன்.
நெருஞ்சி முள் முனையில் விஷம் தோய்த்ததைப்
போல உன் சொற்கள் என்னைக் குத்த
கண்ணீரை மறைத்து வீடு திரும்பினேன்.
போன் தவறி மழையில் கீழே விழுந்ததை
உன்னிடம் சொல்லியிருக்கலாம்
நான் சொல்லவில்லை.
மழை பெய்து கொண்டிருக்கிறது
போனை எப்பொழுதும் கையில் வைத்திருக்க
இப்பொழுதெல்லாம் அவசியமில்லை.
என்னை அழைக்க எவருமில்லை.
மழையில் நனையலாம்தான்.
நான் நனையவில்லை.
About The Author
prasanna